முரசொலிக்கு சீட் கிடைத்தது எப்படி? டீம் பார்த்த வேலை: சிற்றரசர் ஏமாற்றம்
தஞ்சாவூர் லோக்சபா தொகுதி சிட்டிங் எம்.பி., பழனிமாணிக்கம். கடந்த 1984ம் ஆண்டு முதல் லோக்சபா தேர்தலில், அறிமுகமாகி ஒன்பது முறை போட்டியிட்டு, ஆறு முறை வெற்றி பெற்றார். கடந்த 2004 - -2014 வரை மத்திய நிதித்துறை இணையமைச்சராக பதவி வகித்தார். தொகுதியில் சிற்றரசர் போல பழனிமாணிக்கம் வலம் வந்தார்.
பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தாலும், தொகுதி பக்கம் வரவில்லை என்ற குற்றச்சாட்டும், 'ஒன்பது முறை வாய்ப்பு வழங்கியாகி விட்டது; 10வது முறையாக அவருக்கு சீட் வேண்டாம்' என கட்சியினர் மத்தியில் ஒலித்த எதிர்ப்புக் குரலும் பலமாக இருந்தன.
இதேபோல், கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், எம்.பி., பழனிமாணிக்கத்திற்கு சீட் வழங்காமல், டி.ஆர்.பாலுவிற்கு சீட்டு வழங்கப்பட்டதால், அ.தி.மு.க., வேட்பாளர் பரசுராமன் வெற்றி பெற்று எம்.பி.யானார். இதற்கு எம்.பி., பழனிமாணிக்கம் உள்ளடி வேலை பார்த்தது தான் காரணம் என்ற குற்றசாட்டும் நிலவியது.
இருப்பினும், பழனிமாணிக்கம் உள்ளிட்ட 24 பேர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தனர். இந்நிலையில், ஒரு காலத்தில் பழனிமாணிக்கம் ஆதரவாளராக இருந்த முரசொலி, மத்திய மாவட்ட செயலரும், திருவையாறு எம்.எல்.ஏ.,வுமான சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளராக மாறினார். வடக்கு ஒன்றிய செயலருக்கான உள்கட்சி தேர்தலில் பழனிமாணிக்கம் தரப்பை எதிர்த்து முரசொலியை ஒன்றிய செயலர் ஆக்கினார் சந்திரசேகரன்.
இவர் வாயிலாக அமைச்சர் மகேஷ், டி.ஆர்.பாலு ஆகியோரின் மதிப்பை முரசொலி பெற்றார். ஒன்றிய செயலராக பொறுப்பேற்ற பின், கட்சியில் சுறுசுறுப்பாக பல்வேறு பணிகளை செய்து உதயநிதியின் மனதிலும் முரசொலி இடம்பிடித்தார்.
முரசொலியை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என அமைச்சர் மகேஷிடம், எம்.எல்.ஏ., சந்திரசேகரன், தஞ்சாவூர் மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் சிபாரிசு செய்தனர். பின்னர், டி.ஆர்.பாலு, அமைச்சர் மகேஷ், எம்.எல்.ஏ., சந்திரசேகரன் என டீமாக தலைமைக்கு முரெசாலியை பற்றி எடுத்து கூறி, சீட்டும் வாங்கி கொடுத்து விட்டதாக கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தஞ்சைக்கு பொறுப்பு அமைச்சரான மகேஷுக்கு, பழனிமாணிக்கத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காதது தான், சீட் கொடுக்காததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பழனிமாணிக்கம் அதிருப்தியில் உள்ளார். அதனால் உள்ளடி வேலையை முரசொலி சமாளிப்பாரா என்பது தான் கட்சியினர் மத்தியில் தற்போது பேச்சாகஉள்ளது.
வாசகர் கருத்து