வேட்பாளர் தேர்வில் உள்ளடி வேலை: பட்டியலை துாக்கி வீசிய ராகுல்

லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தரப்பில் இழுபறி நீடிக்கிறது. அதற்கான பின்னணி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, ஒன்பது தொகுதிகளுக்கு 217 பேர், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு 65 பேர் என, மொத்தம் 280 விருப்ப மனுக்கள் சத்தியமூர்த்தி பவனில் பெறப்பட்டன.

அவற்றில் திருவள்ளூருக்கு, 46; திருநெல்வேலிக்கு, 38; கடலுாருக்கு, 34; மயிலாடுதுறைக்கு, 39 மனுக்கள் குவிந்தன. இந்த நான்கு தொகுதிகளை கைப்பற்ற அக்கட்சியினர் மத்தியில், பெரும் போட்டி நிலவுகிறது.

விருப்ப மனுக்களை கொண்டு மாநில, 'பரிசீலனை கமிட்டி' தொகுதிக்கு தலா, மூன்று வேட்பாளர்களின் பெயர்களை பரிசீலிக்க வேண்டும். அப்படி பரிசீலித்த பட்டியலை, டில்லியில் உள்ள மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

பார்த்ததும் அதிர்ச்சி



அதில் ஒருவரை வேட்பாளராக மத்திய தேர்தல் குழு தேர்வு செய்து வெளியிடும் என்பது காங்கிரஸ் விதி. இந்த முறை அப்படி செய்யாமல், விருதுநகர், கரூர் தொகுதிகளுக்கு தலா ஒரு வேட்பாளர் பெயர் மட்டும் தேர்வு செய்துள்ளனர்.

மற்ற தொகுதிகளுக்கு தலா இரண்டு வேட்பாளர் பெயர் கொண்ட பட்டியலை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தயாரித்துள்ளனர்.

அவர்கள் தயாரித்த பட்டியலுடன், டில்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மத்திய தேர்தல் குழுவினர் கூடி வேட்பாளர் தேர்வு பணியை மேற்கொண்டனர்.

அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் கார்கே, மத்திய தேர்தல் குழு பொறுப்பாளர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேட்பாளர் பட்டியலை ராகுல் வாங்கி பார்த்தபோது, கரூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரின் பட்டியலில், 'சிட்டிங்' எம்.பி.,' பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தது.

கட்சி விதிப்படி, 2 - 3 நபர்களுடைய பெயர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பார்த்து, யார் வேட்பாளர் என முடிவெடுக்க முடியும்.

மயிலாடுதுறை வேட்பாளர் பெயரில் ராகுலுக்கு நெருக்கமான உயர் வகுப்பை சேர்ந்த ஒருவரும், திருவள்ளூரில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., ஒருவரின் பெயரும் முதல் பெயராக இல்லாமல் இருந்ததும், ராகுலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், கரூர், விருதுநகர் தொகுதிகளில் ஒருவர் பெயர் மட்டும் இருந்ததால், அதில் 'எப்படி ஒருவர் பெயர் மட்டும் இடம் பெறலாம்? வேறு யாரும் அந்த தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்கவில்லையா. அங்கு கட்சியினர் யாருமே இல்லையா?' என்ற கேள்வியை ராகுல் எழுப்பிஉள்ளார்.

பரிந்துரை



மேலும் ராகுல் அதிருப்தி அடைந்து, பட்டியலை மேஜை மீது வீசியுள்ளார். இதனால், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, மீண்டும் தொகுதிக்கு தலா, மூன்று பேர் இடம்பெறும் வகையில் பட்டியல் தயார் செய்துள்ளனர்.

இதில் கடலுார் தொகுதிக்கு ராம.சுகந்தன், சுதா ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நாசே ராமச்சந்திரன் பெயரும் சேர்க்கப்பட்டது.

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு கொடுக்கக்கூடாது என, சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி போன்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மயிலாடுதுறைக்கு பிரவின் சக்கரவர்த்திக்கு கொடுக்கக் கூடாது என மணிசங்கர் அய்யர், பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோர் வலியுறுத்தினர். எனவே, அத்தொகுதிக்கு விஷ்ணு பிரசாத்திற்கு வழங்க வேண்டும் என சிதம்பரம் பரிந்துரை செய்துள்ளார்.

திருநெல்வேலி தொகுதிக்கு பால்ராஜ், கடலுார் தொகுதிக்கு நாசே ராமச்சந்திரன் ஆகியோருக்கு வழங்க வேண்டும் என, முன்னாள் தலைவர் அழகிரி சிபாரிசு செய்துள்ளார்.

திருவள்ளூர் தொகுதிக்கு விஸ்வநாதன், ஜெயகுமார் பெயருடன் சசிகாந்த் செந்தில் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தங்களுக்கு வேண்டிய ஆதரவாளர்கள் பெயர்களை கோஷ்டி தலைவர்கள் அனைவரும் பரிந்துரை செய்துள்ளனர். அப்படி தயாரிக்கப்பட்ட பட்டியல் பொதுச்செயலர் வேணுகோபாலிடம் நள்ளிரவில் வழங்கப்பட்டுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்