அண்ணாதுரையால் முரசொலிக்கு சிக்கல்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடந்த ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அதிராம்பட்டினத்தை தி.மு.க., தலைமை இரண்டாக பிரித்தது. ஏற்கனவே நகரச்செயலராக இருந்த ராமகுணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அஸ்லாம் என, இரு நகரச்செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கு பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ.,வும், தெற்கு மாவட்ட செயலருமான அண்ணாதுரை தான் காரணம் என்று பேச்சு எழுந்தது.
கூடவே, தொகுதி நிதியில் இருந்து அதிராம்பட்டினம் பகுதிக்கு எந்த நிதியும் அவர் ஒதுக்கீடு செய்யவில்லை; கட்சியினரை அனுசரித்து செல்வது இல்லை போன்ற அதிருப்தி கட்சியினர் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்குள் வரும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் பகுதி கட்சி நிர்வாகிகளை, தி.மு.க., வேட்பாளர் முரசொலி சந்தித்து ஆதரவு கேட்டார்.
அந்த வகையில், நகரச்செயலர் ராமகுணசேகரன் அலுவலகத்திற்கு வேட்பாளர் முரசொலி சென்றபோது, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும், முரசொலியிடம், 'அதிராம்பட்டினத்தில் தி.மு.க., இரண்டாக பிளவுபட்டு இருப்பதற்கு காரணம் எம்.எல்.ஏ., அண்ணாதுரை தான்.
'அவர் தங்களுடன் பிரசார வாகனத்தில் வரக்கூடாது, அவரை நீங்கள் பிரசார வாகனத்திலும் ஏற்றக்கூடாது அப்படி அவரை கூட்டி வந்தால், உங்களுக்கு அதிராம்பட்டினத்தில் ஓட்டு கிடைக்காது' என, ஆவேசமாக கூறினர். எதுவும் சொல்ல முடியாமல் தவித்த முரசொலி, அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார்.
இதேபோல, பட்டுக்கோட்டையிலும் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., அண்ணாதுரைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளதால், வேட்பாளர் முரசொலி செய்வதறியாமல் தவிக்கிறார்.
வாசகர் கருத்து