ஜான்பாண்டியனால் அண்ணாமலைக்கு புது சிக்கல்
பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், 'கோவை பகுதியின் கவுண்டர் சமுதாய முன்னோடியான மறைந்த காளிங்கராயர் குடும்ப வாரிசை கொன்ற ஜான்பாண்டியனுக்கு, பா.ஜ., கூட்டணியில் சீட்டா?' என்று வாட்ஸாப் வாயிலாக தகவல் பரப்பப்படுகிறது.
கோவையில் 1993ல் காளிங்கராயர் குடும்ப வாரிசான விவேக், வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஜான்பாண்டியன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார். பின், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார்.
இதை மையப்படுத்தியே தற்போது வாட்ஸாப் வாயிலாக பா.ஜ.,வுக்கு எதிராக தகவல் பரப்பப்படுகிறது. அதில், 'காளிங்கராயர் வாரிசை கொன்ற ஜான் பாண்டியனை, வேட்பாளராக்கி அழகு பார்க்கிறார் பா.ஜ., தலைவர் அண்ணாமலை. அரசியலுக்காக சொந்த இனத்தை காட்டிக் கொடுக்கலாமா?' எனக் கேட்கப்பட்டுள்ளது.
இது, கோவை தொகுதியில் போட்டியிடும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பா.ஜ., தரப்பில் அச்சம் தெரிவிக்கின்றனர். கூடவே, இந்த விஷயத்தை தேர்தல் நெருக்கத்தில் அண்ணாமலைக்கு எதிராக கிளப்பி விடுவதே அ.தி.மு.க., தான் என்றும் அத்தரப்பில் சொல்லப்படுகிறது.
இது குறித்து அண்ணாமலை கூறுகையில், ''சட்ட ரீதியான வழக்குகளுக்கு அவரவர் தான் பொறுப்பு. இதில் பா.ஜ.,வுக்கு என்ன சம்பந்தம்?'' எனக் கேட்டார்.
வாசகர் கருத்து