பா.ஜ.,வுக்கு 4 சதவீத ஓட்டுகள் தான் : எஸ்.பி.வேலுமணி விமர்சனம்
"தி.மு.க.,வில் கோவையில் வேட்பாளராகும் தகுதி யாருக்கும் இல்லை போல் தெரிகிறது. கொள்கை விசுவாசம் இல்லாதவர்களாக தி.மு.க.,வினர் உள்ளனர்" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களின் அறிமுக கூட்டம், இன்று கோவையில் நடந்தது.
கூட்டத்தில், அ.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
அ.தி.மு.க.,வை பலர் அழிக்க நினைத்தனர். அவர்களால் அழிக்க முடியவில்லை. சாதாரண வேட்பாளர்களை போட்டியிட வைப்பது தான் அ.தி.மு.க.,வின் பலம். கோவையில் அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் கணபதி ராஜ்குமார், நமக்கு துரோகம் செய்துவிட்டு தி.மு.க.,வில் இணைந்தவர்.
அவருக்கு மண்டல தலைவர், மேயர், மாவட்ட செயலாளர் என பல வாய்ப்புகளை ஜெயலலிதா கொடுத்தார். தி.மு.க., சார்பில் கோவையில் வேட்பாளராகும் தகுதி யாருக்கும் இல்லை போல் தெரிகிறது. கொள்கை விசுவாசம் இல்லாதவர்களாக தி.மு.க.,வினர் உள்ளனர்.
அண்ணாமலை ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார். சிலர் சோசியல் மீடியாக்களில் வீடியோவை போட்டு தங்களை பெரிய ஆளாக காண்பித்துக் கொள்கின்றனர்.
தேர்தலில் போட்டி என்பது தி.மு.க., -அ.தி.மு.க.,வுக்கும் இடையில் தான். அதில், மாற்றுக் கருத்து கிடையாது. பா.ஜ.,வுக்கு 4 சதவீத மட்டுமே ஓட்டு இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்த கூட்டணி கட்சியான பா.ம.க.,வுக்கு இங்கு ஓட்டு இருக்கிறதா.
இந்த தேர்தலில் பா.ஜ., 10 சதவீத ஒட்டு வாங்கினால் கூட வெற்றி பெற முடியுமா. உலகின் ஏழாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க., இருக்கிறது.
இவ்வாறு வேலுமணி பேசினார்.
வாசகர் கருத்து