'தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ஜ.,!'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''தமிழகத்தில் மூன்றாவது நிரந்தர பெரிய கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
தமிழகத்தில், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து, அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி கட்சிகளே முன்னிலை வகித்தன. இதனால், காலையில் சில நிர்வாகிகள் மட்டும், பா.ஜ., அலுவலகமான கமலாலயம் வந்திருந்தனர். மத்தியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைவது உறுதியானதும், அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.
பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், கமலாலயம் வந்திருந்த கட்சியினருக்கும், செய்தியாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். பட்டாசு வெடித்து, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பின், எச்.ராஜா அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. லோக்சபா தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக யாரும் ஆட்சிக்கு வர முடியாது; நேருவுக்குப் பின் மூன்றாவது முறையாக தொடர்ந்து யாரும் வெற்றி பெறவில்லை என்று பலரும் பேசினர். ஆனால், மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
மேலும், இரு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது. ஒடிசாவில், பா.ஜ., ஆட்சி அமைய உள்ளது. தென் மாநிலங்களில் பா.ஜ., இல்லை என்று பேசப்பட்டது. ஆந்திராவில் ஐந்து ஆண்டுகளுக்கு பின், மிகப்பெரிய பெரும்பான்மையோடு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வந்திருக்கிறது.
கர்நாடகாவில் நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறோம். தெலுங்கானாவில் பா.ஜ., தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில், 2014ல் இரு திராவிட கட்சிகள் இல்லாமல், பா.ஜ., தலைமையில் கூட்டணி அமைந்தது. தற்போது, 12 இடங்களில் பா.ஜ., கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் மூன்றாவது நிரந்தர பெரிய கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து