பீகாரில் மோடியின் தொலைநோக்கு கணக்கு
- ஜனவாகன் -
கட்டுரையாளர், சுயாதீன பத்திரிகையாளர்
பீகாரில், முதல்வர் நிதிஷுக்கு பிரதமர் மோடி, -அமித் ஷா கொடுத்து வரும் முக்கியத்துவம் உள்ளூர் பா.ஜ.,வினரையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. லோக்சபா தொகுதிப் பங்கீட்டின் பொறுப்பை நிதிஷிடமே வழங்கியதோடு, அவருடைய கட்சிக்கு பா.ஜ., 16 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. பா.ஜ., 17; ஐக்கிய ஜனதா தளம் 16; கூட்டணிக் கட்சிகளுக்கு 7 என்று ஒதுக்கீடு நடந்திருக்கிறது.
இண்டியா கூட்டணியிலிருந்து, நிதிஷ் வெளியே வரும் முடிவை நோக்கி நகர்ந்தபோது, பீகார் பா.ஜ.,வினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், அவர்கள் யாருக்கும் பா.ஜ., கூட்டணிக்கு நிதிஷ் வருவதில் விருப்பம் இல்லை. 2014 லோக்சபா தேர்தலில் இங்கே பா.ஜ., தனித்துப் போட்டியிட்டு, 22 தொகுதிகளை வென்றது.
சென்ற பத்தாண்டுகளில் பீகாரில் பா.ஜ., வளர்ந்திருக்கிறது; ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கு சரிந்திருக்கிறது. கடைசியாக நடந்த 2020 சட்டசபை தேர்தலில் கூட, 110 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 74 தொகுதிகளை வென்றது. ஐக்கிய ஜனதா தளமோ, 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 இடங்களையே வென்றது. ஆனாலும், கூட்டணியின் பெயரால் நிதிஷே முதல்வரானார். இனியும் இந்த நிலை நீடிக்க கூடாது என்றே பீகார் பா.ஜ.,வினர் இருந்தனர்.
இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷுக்கு, பா.ஜ.,வில் இடம் அளிக்கக் கூடாது என்று சொல்ல டில்லி சென்றவர்களுக்கு, அங்கே ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ் பா.ஜ.,வைத் தேடி வரவில்லை; பா.ஜ., தலைமைதான் நிதிஷை இழுத்திருக்கிறது என்பதே அந்த அதிர்ச்சி.
மக்களிடம் சலிப்பு
எழுபது வயதை கடந்துவிட்ட நிதிஷ் ஓராண்டு காலமாகவே ஏதோ உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அரசல் புரசலாக பீகாரில் பேச்சு உண்டு. பல சந்தர்ப்பங்களில் அரசு நிகழ்ச்சிகள் இதன் பொருட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களை அவர் சந்திக்கும் 'ஜனதா தர்பார்' நிகழ்ச்சியும்கூட சமீப காலமாகத் தொடர்ந்து நடப்பதில்லை. இயல்புக்கு மாறாக கோபமாக எதையாவது அவர் பேசி வைப்பதற்கெல்லாம்கூட இதுதான் காரணம். 'நிதிஷுக்கு என்ன பிரச்னை என்று அறிக்கை வெளியிட வேண்டும்' என்று, பீகார் முன்னாள் முதல்வரும், நிதிஷிடம் இருந்து பிரிந்து சென்று தனி கட்சி நடத்தும் ஜிதன் ராம் மஞ்சி கூட ஒருமுறை கேட்டிருந்தார்.
தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருப்பதால் நிதிஷ் மீது மக்களுக்கு ஒரு சலிப்பும் இருக்கிறது. இதனால், அடுத்த முறை முதல்வராவது கடினம் என்பதை நிதிஷ் உணர்ந்திருக்கிறார். தீவிரமான மாநில அரசியலிலிருந்து ஒதுங்கி தேசிய அரசியலில் கலந்துவிடலாம் என்ற எண்ணத்திலேயே இண்டியா கூட்டணியில் இணைந்தார். அங்கு அவர் ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்பார்த்தார். அடுத்த முதல்வர் தேஜஸ்விதான் என்றும் கூட பேசிவிட்டார்.
முன்பு, ஐக்கிய முன்னணி காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு செயல்பட்டது போன்று, இண்டியா கூட்டணியில் ஓர் இடத்தை நிதிஷ் எதிர்பார்த்தார். காங்கிரசும் ஏனைய கூட்டணிக் கட்சிகளும் அவரை அலட்சியமாக கையாண்டன. இது அதிருப்தியை உருவாக்கியிருந்தது.
ஏற்கனவே நிதிஷின் உடல்நலம் சார்ந்த கவலையில் இருந்த அவருடைய கட்சித் தலைவர்களை இது மேலும் கலக்கத்தில் தள்ளியது. இது அத்தனையும் டில்லிக்கு தெரிந்திருந்தது.
பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், -ஐக்கிய ஜனதா தளம் இணைந்தால் அது வலுவான கூட்டணி. பிரதமருக்கு உளவுத் துறை அளித்த அறிக்கையில், குறைந்தது 30 - 40 தொகுதிகள் எதிரணிக்குச் செல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிதிஷ் பா.ஜ.,வுக்கு வந்தால் இந்தக் கணக்கு மாறும்; தவிர, நிதிஷ் வெளியேறினால் இண்டியா கூட்டணி மீதான செல்வாக்கு நாடு முழுக்க சரியும்.
பிரதமர் மோடிதான் நிதிஷை அரவணைக்கும் முடிவை எடுத்தார் என்கின்றனர். நிதிஷுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் நல்ல நட்பு உண்டு. முன்னதாக பீகாரில் கவர்னராக இருந்தவர் கோவிந்த். குடியரசு தலைவர் பதவிக்கு கோவிந்த் முன்மொழியப்பட்டபோது பா.ஜ., எதிரணியில் இருந்தார் நிதிஷ். இருந்தபோதிலும், கோவிந்துக்கு தன் கட்சியின் ஆதரவை அறிவித்தார். இந்த நட்பைப் பயன்படுத்தி கொண்டு, கோவிந்தை நிதிஷிடம் துாது அனுப்பியது டில்லி. ஆட்சியில் நிதிஷ் நீடிப்பதோடு, அடுத்த சட்டசபை தேர்தலிலும் இணைந்து போட்டியிடலாம் என்று பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
எதிர்கால அச்சம்
பீகாரில் லாலு மகன் பெரிதாக தலையெடுக்கிறார். எதிரே நிறுத்த பா.ஜ.,விடம் அவ்வளவு செல்வாக்கான முகம் இல்லை. தேர்தலுக்கு நிதிஷ் பயன்படுவார். நிதிஷுக்கு அடுத்த நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் வலுவான தலைவர்கள் வரிசை இல்லை. ஆகையால், எதிர்கால அச்சம் அக்கட்சியினர் எல்லோருக்குமே இருக்கிறது; திரைமறைவில் பலர் பா.ஜ.,வோடு தொடர்பிலும் இருக்கின்றனர்.
இனி நிதிஷே அணி மாறினாலும், அக்கட்சியினர் அதற்குத் துணிய மாட்டர். ஆக, ஐக்கிய ஜனதா தளம் எதிர்காலத்தில் பா.ஜ.,வுக்குள் வந்துவிடும். இந்த தேர்தல் பலனைத் தாண்டி பா.ஜ.,வுக்குக் கிடைக்கும் அடுத்த இரு பலன்கள் இவை. இந்தக் கணக்கில்தான் நிதிஷ் கேட்டதெல்லாம் கிடைக்கிறது.
எப்படி இருந்தாலும், இப்போதைக்கு மோடி -நிதிஷ் இருவருக்குமே இது நல்ல பேரம்தான். தேர்தலுக்கு முன்பே பாதி அறுவடை நடந்துவிட்டதே!
வாசகர் கருத்து