Advertisement

சலோ அயோத்யா: பா.ஜ.,வின் கணக்கு

- ஜனவாஹன் -



பிரதமர் மோடி உ.பி., - பா.ஜ., நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், 'எத்தனை இடங்களில் வெல்வோம்?' என கேட்டார்.

'80ல் 70 நிச்சயம் வெல்வோம்' என நிர்வாகிகள்பெருமையோடு பதில் அளித்தனர்.

பிரதமர் முகம் இறுகியது.

நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி. 80ல் 70 என்பது உ.பி.,யில் பெரிய சாதனை. 2014ல் பா.ஜ.,வுக்கு அதிகபட்சமாக 71 கிடைத்தது. 2019ல் அதுவே 62 ஆக சரிந்துவிட்டது.

அத்துடன், 24 தொகுதிகளில் 20 முதல் 50 சதவீதம் வரை முஸ்லிம் வாக்குகளே முடிவை தீர்மானிக்கும். 2014ஐ போல் நான்கு முனை போட்டியில் முஸ்லிம் ஓட்டு பிரிந்தால் மட்டுமே பா.ஜ., 70 தொகுதிகளை இலக்காகக் கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்த கணக்கு. ஆனால், இந்த முறை, காங்கிரசும் ஸமாஜ்வாதியும் கைகோர்த்துள்ளன. பகுஜன் ஸமாஜையும் சேர்த்து மும்முனை போட்டி தான். இந்த சூழலில் 70 எடுப்பதே சாதனை.

அதை மோடி ஏற்கவில்லை. 'உங்களுக்கு அயோத்தி ஒரு சக்தியாகத் தெரியவில்லையா? நான் 80க்கு 80 எதிர்பார்க்கிறேன். கிடைக்கவில்லை என்றால், நீங்கள் என் பணியை மதிக்காததாக ஆகும்' என்று, கடிந்து கொண்டார்.

பிரதமரின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ள, பா.ஜ.,வின் வளர்ச்சிக்கும் அயோத்திக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர வேண்டும். 1980களில் விஸ்வ ஹிந்து பரிஷத் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதென பிரசாரத்தை துவங்கியது. இதில் பா.ஜ.,வும் இணைந்து கொண்டது. அதற்கு பின் தான் பொது தேர்தல்களில் கணிசமான எண்ணிக்கையில் வெல்லத் துவங்கியது.

படிப்படியான வளர்ச்சி



கடந்த, 1989 தேர்தல் வரை, தேசிய அளவில் இரண்டே இடங்களை வென்ற பா.ஜ., அந்த பொது தேர்தலில் 85 இடங்களை பிடித்தது. பின் படிப்படியாக 1991ல் 120, 1996ல் 161, 1998ல் 182 என வளர்ந்தது.

இது பற்றி பா.ஜ.,வின் மூத்த மாநில தலைவர்கள், '1999 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ராமர் கோவில் கட்டப்படவில்லை என்றதும், 1999ல் உ.பி.,யில் கிடைத்த 29 இடங்கள் 2004ல் 10ஆக குறைந்துவிட்டன. 2009லும் 10 தான் கிடைத்தது. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், 71 தொகுதிகளை பா.ஜ.,வுக்கு மக்கள் அளித்தனர். 2024ல் ராமர் கோவில் நிறைவேறிவிட்டிருக்கிறது. அப்படியென்றால், மேலும் கூடுதல் இடங்கள் கிடைக்க வேண்டும் என்பதையே மோடி உணர்த்தினார்' என்கின்றனர்.

பிரதமரின் கண்டிப்புக்கு பின், உ.பி.,யில் பா.ஜ.,வினர் 'அயோத்தி சலோ' இயக்கத்துக்கு உ.பி.,யில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

நாட்டின் 543 லோக்சபா தொகுதிகளில் இருந்தும் தொகுதிக்கு 10,000 பேரை அயோத்திக்குக் கூட்டிவந்து தரிசனம் செய்து வைக்கும் 'அயோத்தி சலோ' இயக்கத்தை ஏற்கெனவே வெவ்வேறு பெயர்களில் சங் பரிவார் அமைப்புகள் நடத்தி வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே அலையலையாக மக்கள் அயோத்திக்கு வருவதால் இதில் மாநில பா.ஜ., பெரிதும் கவனம் செலுத்தவில்லை. ஆனால், இப்போது, உ.பி.,யில் உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் அயோத்திக்கு வந்து சென்று இருக்கின்றனரா என்பதை கவனித்து, சங் பரிவார் அமைப்புகள் செயல்படுகின்றன.

முன்னதாக, பா.ஜ., ஆதரவு ஹிந்துக்களை மட்டுமே அயோத்திக்கு அழைத்து வந்தவர்கள், இப்போது, வெளி வட்டத்தில் உள்ளவர்களை அழைத்து வந்து, அயோத்தியின் மாற்றங்களை பொருளாதார கண்ணோட்டத்தில் காட்டுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பைசாபாத் மாவட்டத்தின் ஓர் அங்கமாக; 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உள்ள இரண்டு நகராட்சிகளில் ஒன்றாக, பெரிய வசதிகள் இல்லாத சிறு நகரமாக அயோத்தி இருந்தது.

ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. 2017ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. 89.58 சதுர கிமீ பரப்பளவுக்கு அது உள்ளணைக்கப்பட்டு, 500 ரூபாய் கோடி பட்ஜெட்டுக்கு மாறியது.

அடுத்து, 2018ல் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என்றாக்கப்பட்டது. அப்போதே ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் வந்து செல்லும் நகரமாகத்தான் அயோத்தி இருந்தது. தொடர் மாற்றங்களுக்குப் பின் அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது. 2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலிலேயே அயோத்தியின் மாற்றங்களையும் பாஜக பேசியது. அந்த ஆண்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வந்து சென்றிருந்தனர்.

இப்போது அயோத்தியில் கிட்டத்தட்ட 80,000 கோடி ரூபாய் அளவுக்கு திட்டங்களையும் பணிகளையும் கொண்டுவந்து இறக்கியிருக்கிறது பா.ஜ., அரசு. அகன்று விரிந்த சாலைகள், பிரமாண்டமான விமான நிலையம், மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம், நேர்த்தியான நகர மறுகட்டுமானம் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறது.

பெரும் அபிமானம்



ராமர் கோவிலோடு, இவற்றையெல்லாம் பார்க்கும் உ.பி.,யை சேர்ந்த எவரும் தன் அரசு மீது அபிமானம் கொள்வர் என்று கணக்கிடுகிறது பா.ஜ.,

ராமர் கோவில் திறப்புக்குப் பின்னர் சராசரியாக ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர். ஏப்ரல் மாதத்தில் ராம நவமி விசேஷம் என்பதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதற்குத் தோதாகவே உத்தர பிரதேச தேர்தல் தேதிகளும் மே இறுதி வரை இருக்கின்றன.

உத்தர பிரதேசத்தோடு மட்டும் நிற்காமல், நாடு முழுதுமே 'அயோத்தி சலோ' இயக்கம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வேகம் பிடிக்கும் என்கின்றனர் பா.ஜ.,வினர். இந்திய ரயில்வே, ஒவ்வொரு ரயிலிலும் 1,400 பயணிகள் அயோத்திக்கு வந்து, தங்கிப் பார்வையிட்டு திரும்பிச் செல்லும் வகையில் ஆஸ்தா ரயில்களை ஏற்கெனவே இயக்குகிறது.

ஜம்மு துவங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அயோத்திக்கு வந்து செல்லும் வகையில் இப்படி அறிவிக்கப்பட்டிருக்கும், 200 சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை!

அயோத்தி மேல் பிரதமர் மோடி வைத்திருக்கும் இந்த அபார நம்பிக்கை அவருக்கு 80க்கு 80ஐ கொடுக்குமா?



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்