Advertisement

சென்னையில் மோடியின் 'ரோடு ஷோ' : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

சென்னையில் பிரதமர் மோடியின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக 7வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்தார்.

முன்னதாக, மகாராஷ்ட்ராவில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பிறகு தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ நடக்க உள்ள தி.நகர் செல்லும் வரையில் சாலையின் இருபக்கமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக கரகாட்டம் உள்பட ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதமரின் வருகையை ஒட்டி 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்பகுதியைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ரோடு ஷோ தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடியின் உருவம் பொறித்த பதாகைகளை போலீசார் அப்புறப்படுத்தினர். சரியாக 6.30 மணியளவில் பட்டு வேட்டி, சட்டையில் வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அவருடன், தென்சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ், கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் பயணித்தனர்.

பிரதமர் வருகையின்போது சாலையின் இருபக்கமும் திரண்டிருந்த பொதுமக்கள் பூக்களைத் தூவி வரவேற்றனர். தி.நகரில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான 2 கி.மீட்டர் நீளத்துக்கு வாகனப் பேரணி நடைபெற்றது.

கையில் தாமரை சின்னத்தை வைத்தபடி, பொதுமக்களிடம் பிரதமர் மோடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின், கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு பிரதமர் மோடி கிளம்பிச் சென்றார்.

நாளை வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்