அ.தி.மு.க., மகளிர் அணி கூட்டம்; துாங்கி வழிந்த கட்சி நிர்வாகிகள்
சென்னை: அ.தி.மு.க., மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் துாங்கி வழிந்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்க, அ.தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.
மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
ஜெயலலிதா இருந்தபோது, மகளிர் அணிக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பார். மகளிர் அணி நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ., 'சீட்' கிடைக்கும். அதனால், அணி நிர்வாகிகள் கூட்டம் நடக்கும்போது, பெண்கள் கூட்டம் அலைமோதும்.
ஜெயலலிதா இறந்த பின், மகளிர் அணியை, அ.தி.மு.க., தலைமை கண்டுகொள்வதே இல்லை. இதனால், எவ்வித செயல்பாடும் இல்லாமல், மகளிர் அணி மந்தமாகி விட்டது.
அதனால் தான், தற்போது நடந்த கூட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகிகளை தவிர, தலைமை அலுவலகத்துக்கு யாரும் வரவில்லை.
மாநில துணை செயலர் காயத்ரி ரகுராம், தனக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். கடந்த முறை நடந்த மகளிர் அணி கூட்டத்தில், நிர்மலா பெரியசாமி -- நடிகை விந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்கும், நடிகை கவுதமிக்கும் அழைப்பே கொடுக்கவில்லை.
அதேபோல், அமைப்பு செயலர் கோகுல இந்திராவுக்கும் அழைப்பு இல்லை. ஆனாலும், பகல் 11:00 மணிக்கு வந்த அவர், கூட்டத்தில் பேசி விட்டு, மதியம் 12:15 மணிக்கு கிளம்பி விட்டார்.
காலை 10:00 மணிக்கு துவங்கிய மகளிரணி கூட்டம், மதியம் 1:20 வரை நீடித்தபோதிலும், ஆக்கப்பூர்வமாக யாரும் எதுவும் பேசவில்லை. இதனால், நிர்வாகிகள் பலரும் துாங்கி வழிந்தபடியே இருந்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement


வாசகர்கள் கருத்துகள் (0)