காங்கிரசிடம் இருந்து ஆரணி பறிப்பு: சொந்த கட்சியினரே வைத்தனர் 'வேட்டு'
ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யாக காங்., கட்சியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் உள்ளார். தமிழக காங்., கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனான இவர், பா.ம.க., தலைவர் அன்புமணியின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், காங்., கட்சியின் சிட்டிங் தொகுதியான ஆரணியை, தி.மு.க., தன் வசம் எடுத்துக் கொண்டது. அக்கட்சியின் வேட்பாளராக தரணிவேந்தன் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விஷ்ணுபிரசாத்துக்கு சீட் கிடைக்காததற்கு, காங்., கட்சியில் உள்ள வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே காரணமாக இருந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழக காங்., துணை தலைவர் பலராமன், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு உள்ளிட்டோர், ஆரணி தொகுதியில் விஷ்ணுபிரசாத்துக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, அகில இந்திய காங்., தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அதில், 'கிருஷ்ணசாமியும், அவரது மகன் விஷ்ணுபிரசாத்தும் கடந்த, 1967ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 13 முறை மாறி, மாறி ஆரணி, செய்யாறு, வந்தவாசி சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். கூட்டணி என்றால் வெற்றி பெறுவதும், தனித்து நின்றால் டிபாசிட் இழப்பதும் வாடிக்கையாக உள்ளது.
'வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு சீட் வழங்க வேண்டும். மீண்டும் விஷ்ணுபிரசாத்துக்கு சீட் வழங்கினால், பெரும்பான்மை வன்னியர் சமுதாயத்தின் ஆதரவை காங்., கட்சி இழக்க வேண்டிய நிலை ஏற்படும்' என்று மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால், தொகுதியை மீண்டும் கேட்டு பெறுவதற்கு காங்., தலைமை தயக்கம் காட்டியது. இதற்கிடையில், விஷ்ணுபிரசாத்துக்கு மீண்டும் சீட் வழங்கினால் தோல்வியடைவார் என, விழுப்புரம் மாவட்ட அமைச்சரான மஸ்தானும், திருவண்ணாமலை மாவட்ட அமைச்சரான வேலுவும் தி.மு.க., தலைமையிடம் முன்கூட்டியே தெரிவித்து 'செக்' வைத்து விட்டனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் தொடர்ந்து தி.மு.க.,வையும், ஆட்சியையும் விமர்சித்து வருவதால் எரிச்சல் அடைந்துள்ள தி.மு.க., தலைமை, அன்புமணியின் மைத்துனரான விஷ்ணுபிரசாத்துக்கு ஆரணி தொகுதியை விட்டு தர மறுத்து அதிரடி காட்டி உள்ளது.
வாசகர் கருத்து