சாமிநாதன் கப்சிப் சக்ரபாணி தாம்துாம்
பொள்ளாச்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தேர்வில், மாவட்ட அமைச்சர் அடக்கி வாசித்த நிலையில், பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் கை ஓங்கியது, தி.மு.க.,வினரிடையே முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், கோவை மாவட்டத்தில் 4; திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 2 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதியில், முன்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவர் கைதான பின், பெயரளவுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில், தி.மு.க., அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சாமிநாதன், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் தேர்வில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அவரது ஆதரவாளர்களும் 'சீட்' பெற ஆர்வம் காட்டினர். ஆனால், வழக்கம் போல, அமைச்சர் சாமிநாதன் 'கப்சிப்' என, அடக்கி வாசித்துவிட்டார்.
ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் தேர்வில் தலையிட்டு, தன் ஆதரவாளர் ஈஸ்வரசாமிக்கு, 'சீட்' வாங்கி கொடுத்துள்ளார்.
கட்சியினர் கூறுகையில், 'ஒட்டன்சத்திரத்துக்கு ஆழியாறிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தார் சக்ரபாணி. எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தன் ஆதரவாளர் ஈஸ்வரசாமிக்கு பொள்ளாச்சியில் 'சீட்' வாங்கிக் கொடுத்ததன் வாயிலாக எதிர்காலத்தில் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார்.' என்றனர்.
வாசகர் கருத்து