சொந்த மக்களுக்கே துரோகம் செய்த பா.ம.க., : கூட்டணி குறித்து திருமாவளவன்
"பா.ஜ.,வுடன் பா.ம.க., கூட்டணி சேர்வதால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை" என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களை, வி.சி., தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். அதன்படி, சிதம்பரத்தில் திருமாவளவனும் விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இதன்பின், திருமாவளவன் கூறியதாவது:
சிதம்பரம் தொகுதி மக்களை நம்பி 4வது முறையாக போட்டியிடுகிறேன். மீண்டும் நான் நாடாளுமன்றம் சென்று பணியாற்ற மக்கள் வாய்ப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இண்டியா கூட்டணியில் இணைந்து, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக களத்தில் இருக்கிறோம். கூட்டணியில் வி.சி., உரிய பங்களிப்பை செலுத்தியிருக்கிறது. இப்படியொரு கூட்டணிக்கு வி.சி.,யின் தேவை அவசியம் என்பதை சிதம்பரம் தொகுதி மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
பா.ஜ., உடன் பா.ம.க., கூட்டணி சேர்ந்திருப்பதால் எனக்கு சிக்கல் வரும் எனக் கருதவில்லை. சொந்த சமூகத்துக்கே பா.ம.க., துரோகம் செய்ததாகத் தான் கருதுகிறேன். பா.ஜ., உடன் பா.ம.க., கூட்டணி வைப்பதால் எந்தவகையிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் தரப்போவதில்லை.
எம்.பி.சி., உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள கட்சி, வி.சி., தான். அந்தவகையில், ஓ.பி.சி மக்களும் வி.சி.,க்கு ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து