Advertisement

'வாய்க்கொழுப்பு' பேச்சால் போச்சு: சந்தி சிரிக்கும் செந்தில்குமார் நிலை

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் எம்.பி.,யானவர் செந்தில்குமார். இவர், தர்மபுரி மாவட்டத்தை சேலம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து வரக் காரணமான, வடிவேல் கவுண்டரின் பேரன். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தி.மு.க.,வில், 'சீட்' வழங்கப்பட்டது. ஆனால், எம்.பி., ஆனது முதல் அவரது செயல்பாடுகள் தன்னை முன்னிலைப்படுத்துவதில் மட்டுமே இருந்தன.

மேலும், 2021 சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 5 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., - 3; பா.ம.க., - 2 தொகுதிகளை கைப்பற்றியதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களே இல்லாத மாவட்டமானது தர்மபுரி.

பூமி பூஜைக்கு எதிர்ப்பு



கடந்த, 2022 ஜூலை, 16ல் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணிகளை துவக்கி வைக்க வீடியோ கிராபர்கள் புடைசூழ எம்.பி., செந்தில்குமார் வந்தார். அங்கு பூமி பூஜை செய்ய தயாரான நிலையில், 'என்ன இது, அரசு விழாவில், ஹிந்து முறைப்படி பூஜை ஏற்பாடு இருக்கிறது, கிறிஸ்துவர்கள், முஸ்லிம் மத குருமார்கள் எங்கே? இது திராவிட மாடல் ஆட்சி. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காதீர்கள்' என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

அதேபோல கடந்த, 2022 செப்., 22 ல், அதியமான்கோட்டையில், அதியமான் கோட்ட வளாகத்தில் நவீன நுாலகம் கட்டுமான பணி பூஜையில், செங்கல்லில் சந்தனப்பொட்டு, பூ அலங்காரத்தை பார்த்து டென்ஷன் ஆனார். கல்லை திருப்பி வைத்து, பூக்களை அகற்றி பூஜையை செய்ய வைத்தார்.

தவிர்த்த கட்சியினர்



அவரது செயல்பாடுகள், பொதுமக்களை தாண்டி, தி.மு.க.,வினரிடையேயும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நல்லம்பள்ளி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் சண்முகம், பொதுவெளியிலேயே செந்தில்குமார் எம்.பி.,க்கு தன் எதிர்ப்பை தெரிவித்தார். மாவட்ட செயலர் தடங்கம் சுப்பிரமணி, நிகழ்ச்சிகளுக்கு, எம்.பி.,யை அழைப்பதையே தவிர்த்தார்.

சர்ச்சை பேச்சுகள்



திராவிட மாடல் என்ற பெயரில், தன் பேச்சுகளை சமூக வலைதளங்களில் செந்தில்குமார் எம்.பி.,யே வெளியிட்டார். அது அவருக்கு, மேலும் எதிர்ப்பை மட்டுமே தந்தது. அதோடு நிற்காமல், தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், 'வட இந்தியாவில் சிவன், பார்வதி, விநாயகரை மட்டுமே கடவுளாக பார்க்கின்றனர்.

தென் தமிழகத்தில் முருகனையும் சேர்த்து வணங்குகின்றனர். அப்படி என்றால், வட இந்தியாவில் சிவனுக்கும், பார்வதிக்கும் குடும்ப கட்டுப்பாடு நடத்தப்பட்டதா? ஹிந்துக்களுக்குள்ளேயே நாமம், விபூதி பட்டை பிரச்னை, பல்வேறு கலாசாரங்கள் உள்ளன' என மேலும் ஒரு சர்ச்சையை கிள்ளி போட்டார். இது அவர் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், அவரது, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு சமாளிப்பு பதிலை கூறிய எம்.பி., செந்தில்குமார், கட்சி தலைமையிடம், வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பகிரங்க மன்னிப்பு



கடந்த, 2023 டிச., 4ல் லோக்சபாவில் பேசிய அவர், வட மாகாணங்களில் பா.ஜ., வெற்றி குறித்து பேசுகையில், 'பசு கோமியம் மாநிலங்களில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது' என பேசினார். இதற்கு லோக்சபாவில் மட்டுமல்ல, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், தி.மு.க., தலைமையிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. தி.மு.க.,வில், தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்த எம்.பி., செந்தில்குமார், அனைத்து தரப்பு எதிர்ப்பால், உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோரினார்.

இப்படி சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான செந்தில்குமார், 'வாய்க்கொழுப்பு' பேச்சால், லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த, 2019ல், தர்மபுரி லோக்சபா வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மணி என்பவர் தான். கட்சியினரின் எதிர்ப்புகளை மீறி செந்தில்குமாருக்கு, 'சீட்' வழங்கியதால், தி.மு.க., மீதே மக்கள் அதிருப்திக்குள்ளாகினர். தற்போது தர்மபுரி மாவட்டத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர் கூட இல்லாத நிலை ஏற்பட்டதற்கும் செந்தில்குமாரின் சர்ச்சை பேச்சுகளும் காரணம். தற்போது விழித்துக் கொண்ட கட்சி தலைமை நல்ல முடிவு எடுத்துள்ளது.

இவ்வாறு கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்