சிவகங்கை தொகுதி ஓட்டு எண்ண 5 நாட்களே
சிவகங்கை: சிவகங்கையின் அடுத்த எம்.பி., யார் என்பதை அறிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் திக்... திக்... மனநிலையில் உள்ளனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதியின் கீழ் 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர். ஏப்., 19 ல் 1,857 ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 பேர் 64.25 சதவீத ஓட்டுக்களை பதிவு செய்தனர். ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் பாதுகாப்புடன் காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு துணை ராணுவ படை, போலீசார் என நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு பணிகளை கலெக்டர் ஆஷாஅஜித் நேரடி ஆய்வின் மூலம் உறுதி செய்து வருகிறார். கல்லுாரி வளாகத்தில் 242 சி.சி.டி.வி., கேமராக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
ஜூன் 4 அன்று காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து காலை 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும். இதற்காக தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் 6 தொகுதிக்கு 84 மேஜைகள் அமைத்து, மேஜைக்கு தலா ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் பணி நடக்கும். 6 சட்டசபை தொகுதிகளில் சுற்று வாரியாக எண்ணப்படும் ஓட்டு விபரங்களை, நேரடியாக கலெக்டர் மட்டுமே அறிவிப்பார். வேட்பாளர்கள் சார்பில் ஒரு மேஜைக்கு தலா ஒரு ஏஜன்ட் வீதம் ஓட்டு எண்ணும் பணியை பார்வையிடுவார்கள். இத்தேர்தலில் பா.ஜ.,- காங்., - அ.தி.மு.க.,- நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 20 வேட்பாளர்கள் உள்ளனர்.
வாசகர் கருத்து