தமிழ் திரைப்பட பாடலாசிரியர், நடிகரான சினேகன், கமல் மீதுள்ள பாசத்தால் மதுரையில், 2018ல், மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்த போது இணைந்தார். தற்போது கட்சியின் இளைஞரணி மாநில செயலராக இருக்கும், அவரிடம் நறுக்கென நான்கு கேள்விகள்...
நீங்கள் போட்டியிடும், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி?
மக்கள் விரும்பும் மாற்றத்திற்கான அலை வீசுகிறது. அதிகாரத்தில் இல்லாத நிலையிலும், கட்சி சார்பில் கஜா, கொரோனா சூழலில் சொந்த செலவில் நிவாரணம் வழங்கினேன். மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள், கலைஞர்கள், திருநங்கைகள் என, பலருக்கும் உதவுகிறேன். விருகம்பாக்கம் தொகுதியில், மக்கள் எனக்கு வெற்றி அதிகாரம் கொடுத்தால், மக்கள் சேவை செய்து எதிர்க்கட்சிகளுக்குமாற்றாக இருப்பேன்.
கூட்டணி கட்சிகளான ஐ.ஜே.கே., - ச.ம.க., கட்சிகளின் ஒத்துழைப்பு, நட்புறவு எப்படி இருக்கிறது?
இரு கட்சிகளும் முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிடுகின்றன. அதனால், ஆர்வமுடன் எங்களோடு பணியாற்றி வருகிறார்கள்.எங்கள் சிந்தனைக்கு ஏற்ப ஒத்துழைப்பு தருகிறார்கள். பலர் நோட்டுக்களை அதிகம் கொடுத்து சீட்டுக்களை குறைக்கிறார்கள். நாங்கள் நோட்டுக்களேஇல்லை என, கட்சிகளின் தகுதிகளுக்கு ஏற்ப அதிக சீட்டுகளை கொடுத்துள்ளோம்.
கடந்த தேர்தல்களில் ஓரளவு ஓட்டு பெற்ற ம.நீ.ம., இம்முறை எதிர்க்கட்சி அந்தஸ்த்து பெறுமா அல்லது ஆட்சியை பிடிக்குமா?
முதல் தலைமுறை வாக்காளர்கள், உறுதியாக பிற கட்சிகளுக்கு ஒரு ஓட்டை கூட அளிக்க மாட்டார்கள். எடைக்கு எடை பணம்கொடுத்தாலும், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டார்கள். அதனால், நானும், நீங்களும் கணிக்க முடியாத அளவு ஓட்டு விகிதம் பெருகும். ம.நீ.ம.,ஆட்சியை பிடிக்குமா என்ற ஆருடத்திற்கு வர, நாங்கள் விரும்பவில்லை, மக்களே முடிவு செய்யட்டும்.
ரஜினி கட்சி ஆரம்பிக்காத நிலையில், அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஆதரவு கமலுக்கு இருக்கிறதா?
பல மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் விரும்பாமல் கட்சியில் சேர்க்க வேண்டாம்,பிரியமுடன் வந்தால் வரட்டும் என, கமல் கூறியுள்ளார். சுருக்கமாக கூறினால் ம.நீ.ம.,க்கு பக்க பலமாக இருப்பதே ரஜினி ரசிகர்கள் தான்.
வாசகர் கருத்து