Advertisement

ஸ்டேட்டை அடுத்து சென்ட்ரல்: இலவசங்களை வாரியிறைத்த ஸ்டாலின்

லோக்சபா தேர்தலை ஒட்டி தேர்தல் அறிக்கையை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காலை உணவுத் திட்டம் முதல் மகளிர் உரிமைத் தொகை வரையில் சட்டசபை பாணியில் வாக்குறுதிகளை வாரி இறைத்திருக்கிறது, தி.மு.க.,

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. முன்னதாக, தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டது.

இதன்பின், தேர்தல் வரைவு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், தி.மு.க., தேர்தல் அறிக்கையை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். இதில், 36 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?

1. மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

2. கவர்னர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதல்வர்களின் ஆலோசனையை பெற்றே கவர்னர்கள் நியமிக்கப்பட வேண்டும். கவர்னர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.

3. உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

4. புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்.

5. மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.

6. மத்திய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

7. அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

8. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

9. தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

10. ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

11. புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.

12. நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

13. நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

14. இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கப்படும்.

15. தமிழ்நாட்டிற்கு ' நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

16. மாநில முதல்வர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.

17. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்

18. பா.ஜ., அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

19. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

20. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

21. குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.

22. மத்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

23. ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

24. வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்.

25. இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

26. விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.

27. எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.

28. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.

29. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.

30. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும்.

31. பா.ஜ., அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.

32. ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

33 . மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.

34. ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

35. இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

36. சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்