தி.மு.க., வேட்பாளர் பட்டியல்: 6 சிட்டிங் எம்.பி.,க்களுக்கு சீட் மறுப்பு

லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடக் கூடிய 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொன்முடியின் மகன் உள்பட 6 சிட்டிங் எம்.பி.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்த பின்னர், தி.மு.க., போட்டியிடக் கூடிய 21 தொகுதிகளின் பட்டியல் வெளியானது.
லோக்சபா தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின், தி.மு.க., சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
யார் யாருக்கு வாய்ப்பு?
1. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு. 2. தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி. 3. நீலகிரி (தனி) - ஆ.ராசா. 4. மத்திய சென்னை - தயாநிதி மாறன். 5. அரக்கோணம் - எஸ். ஜெகத்ரட்சகன். 6. வட சென்னை - கலாநிதி வீராசாமி. 7. தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன். 8. காஞ்சிபுரம் (தனி) - க.செல்வம். 9. வேலூர் - கதிர் ஆனந்த். 10. தருமபுரி - வழக்கறிஞர் அ.மணி. 11. திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை. 12. ஆரணி - தரணி வேந்தன். 13. கள்ளக்குறிச்சி - தே.மலையரசன். 14. சேலம் - டி. எம். செல்வகணபதி. 15. ஈரோடு - கே.இ.பிரகாஷ். 16. கோவை - கணபதி பி.ராஜ்குமார். 17. பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி. 18. பெரம்பலூர் - அருண் நேரு. 19. தஞ்சாவூர் - முரசொலி. 20. தேனி - தங்க தமிழ்ச்செல்வன். 21. தென்காசி (தனி) - Dr ராணி ஸ்ரீகுமார்
இந்தப் பட்டியலின்படி, 11 புதிய முகங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மூன்று பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு பதில் வேட்பாளராக முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரியில் செந்தில்குமாருக்கு பதில் வழக்கறிஞர் மணியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் தனுஷ்குமாருக்கு பதில் ராணி ஸ்ரீகுமாரின் பெயர் வெளியாகியுள்ளது. சேலத்தில் பார்த்திபனுக்கு பதில் செல்வகணபதி, கள்ளக்குறிச்சியில் கவுதம சிகாமணிக்குப் பதில் மலையரசன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் சண்முகசுந்தரத்துக்குப் பதில் ஈஸ்வரசாமியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து