பா.ஜ,.வை எதிர்க்க துணிவு வேண்டும்: பழனிசாமியை சாடிய ஸ்டாலின்
"தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 10 சதவீதம் கூட தி.மு.க., நிறைவேற்றவில்லை என பழனிசாமி பொய் பேசுகிறார். அவர் செய்திகளைப் பார்ப்பதில்லை. சட்டமன்றத்தில் சொன்னாலும் கேட்பதில்லை" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஈரோட்டில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் செய்வோம் என்பது என்னுடைய பாணி. எதையுமே செய்ய மாட்டோம் என்பது அ.தி.மு.க., பா.ஜ.,வின் பாணி. தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என பழனிசாமி பொய் பேசுகிறார்.
அவர் செய்திகளை எல்லாம் பார்ப்பதில்லை. சட்டமன்றத்தில் சொன்னாலும் கேட்பதில்லை. இப்படிப் பொய் பேசினால் தன் தவறுகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என நினைக்கிறார்.
2016ல் அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், 'செல்போன் தருவோம்' என்றார்கள். 'ஸ்கூட்டி கொடுப்போம்' என்றார்கள். 'அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை தருவோம்' என்றார்கள். இதையெல்லாம் கொடுத்தார்களா?
பாஜ., ஆட்சியில் கருப்புப் பணம் மீட்கப்படவில்லை. தேர்தலின்போது கூறியது போல யாருக்கும் 15 லட்சம் தரவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பைத் தரவில்லை. ஊழலற்ற ஆட்சியை பா.ஜ., நடத்தவில்லை. அதற்கு இமாலய எடுத்துக்காட்டு, தேர்தல் பத்திர ஊழல்.
சி.ஏ.ஜி., அறிக்கையில் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரத்துடன் கூறியது. அதற்கு பா.ஜ.,விடம் இருந்து பதில் வந்ததா. இவை எல்லாம் இண்டியா கூ,ட்டணி ஆட்சிக்கு வந்தால் அம்பலமாகும். அப்போது, யார் யார் கம்பி எண்ணப் போகிறார்கள் எனப் பார்ப்போம்.
இந்திய மக்களுக்கு எதுவும் செய்யாத மோடி, மேற்கு மண்டலத்துக்கு ஏதோ சாதனைகளை செய்ததாக பேசுகின்றனர். தொழில்வளம் மிகுந்த மேற்கு மண்டலம், பா.ஜ.,வின் இன்னல்களுக்கு அதிகமாக ஆளாகியுள்ளது.
மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தொழில்துறையை மொத்தமாக இழுத்து மூடிவிடுவார்கள். மோடிக்கு நெருக்கமான சிலர் மட்டுமே வர்த்தகம் செய்யும் நிலையை ஏற்படுத்துவார்கள்.
ஒரே இரவில் 500, 1000 ரூபாயை தடை செய்வதாக அறிவித்தார். இதனால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தான் அழிந்தன. அதன்பின், ஜி.எஸ்.டி என்ற பெயரில் கொடூர வரியை போட்டனர். இந்த 2 செயற்கை பேரிடர்களை சந்தித்த பிறகு கொரோனா என்ற பேரிடர் வந்தது.
இதன்பிறகும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு என தொழில்துறை பெரிதும் பாதித்தது. மில்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 2 நாள்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது, சுங்கச்சாவடி முறையை மாற்றி செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். நாங்கள் சுங்கச்சாவடியே இருக்காது என்கிறோம்.
இது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, ஊருக்கு உபதேசம் செய்யலாமா. பா.ஜ., கூட்டணியில் இருந்ததால் விமர்சிக்க மாட்டோம் என பழனிசாமி கூறுகிறார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க பா.ஜ.,வின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரித்தவர்.
இதறகு அவர் கண்டுபிடித்த வார்த்தை தான் கூட்டணி தர்மம். சசிகலாவைப் பற்றிப் பேசியது எந்த மாதிரியான தர்மம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாட்டர் பாட்டில் மரியாதை கொடுத்தது என்ன தர்மம், ராமதாஸை விமர்சித்தது கூட்டணி தர்மத்தில் வராதா.
பழனிசாமியால் பா.ஜ.,வை எதிர்க்க முடியாது. அதற்குத் துணிவும் முதுகெலும்பும் வேண்டும். பா.ஜ.,வின் கைகளில் பழனிசாமியின் ஊழல் குடுமி இருக்கிறது. சம்பந்திக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு எனக் கேட்டவர் தான் பழனிசாமி.
குட்கா வியாபாரியிடம் பணம் வாங்கிய அமைச்சரை வைத்து ஆட்சியை நடத்தியவர். அவருக்கு தி.மு.க,.வை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது. குஜராத் முதல்வராக மாநில உரிமைகைளைப் பற்றிப் பேசிய மோடி, டெல்லிக்குப் போன பிறகு மாநிலங்களை அழிக்கத் துடிக்கிறார்.
சிலிண்டர் விலையை குறைத்ததில் இருந்தே மோடியின் தோல்வி பயம் தெரிந்துவிட்டது. விலை குறைப்பு நாடகம் எல்லாம் மக்களை மறக்கடிக்க செய்யும் நாடகம். எட்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக வசூலித்துள்ளனர்.
மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை கைது செய்து ஜாமீன் கூட கொடுக்காமல் வைத்துள்ளனர். அடக்குமுறை வெல்லாது என்பதை மக்கள் பா.ஜ.,வுக்கு புரிய வைப்பார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து