தேனியை கைகழுவிய காங்கிரஸ்: தி.மு.க., அழுத்தமே காரணம்
தமிழக காங்., மாநில தலைவர், பாரம்பரிய அரசியல்வாதி என பல அடையாளம் கொண்ட இளங்கோவன் 2019 தேர்தலில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க.,வின் ரவீந்திரநாத்திடம் 76,693 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மூன்றாவது இடத்தில் அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச் செல்வன் 1 லட்சத்து 44,050 ஓட்டுகளை பெற்றிருந்தார். தற்போது தங்கத்தமிழ்ச் செல்வன் தி.மு.க., மாவட்ட செயலாளர்.
அந்த தேர்தலில் ஓ.பி.எஸ்., பலம், இளங்கோவன் காங்., கட்சியையே அனுசரித்து போகாத குற்றச்சாட்டு மற்றும் முழுமையாக பிரசாரத்தில் ஈடுபடாதது போன்ற காரணங்களால் காங்.,க்கு தோல்வி ஏற்பட்டது.அதேநேரம் இந்த தேர்தலில் தேனி தொகுதி காங்.,க்கு தான் மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தி.மு.க., எடுத்த சர்வே அடிப்படையில் திருச்சி தொகுதிக்கு சிட்டிங் எம்.பி.,யான திருநாவுக்கரசர் போட்டியிட வேண்டாம் என்ற அறிவுறுத்தலால் அவரை தேனி தொகுதியில் போட்டியிட வைக்கும் எண்ணத்தில் காங்., இருந்தது. அதேநேரம் தேனியில் போட்டியிட திருநாவுக்கரசரும் விருப்பம் தெரிவிக்காமல், மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்தார்.
அதேநேரம் காங்., கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய தொகுதிகள் லிஸ்டில் தேனியும் இடம் பெற்றிருந்தது. அங்கு தங்கத்தமிழ்ச்செல்வனை களம் இறக்கும் முடிவில் தி.மு.க., தலைமை இருந்தது.
தேனி தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., தினகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இத்தொகுதியில் ஆண்டிபட்டி, தேனி, உசிலம்பட்டி, சேடபட்டி போன்ற பகுதிகளில் முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகம் உள்ளன. இதுதவிர இத்தேர்தலில் தினகரன் - ஓ.பி.எஸ்., என்ற பலமான கூட்டணியும் இணைந்துள்ளது.
இதனால் அதே சமூகத்தைச் சேர்ந்த தங்கத்தமிழ்ச்செல்வன் தி.மு.க., சார்பில் களம் இறங்கினால் தான் சரியாக இருக்கும் என கருதிய காங்., இத்தொகுதியை தி.மு.க.,விற்கு விட்டுக்கொடுத்துள்ளது என்கின்றனர் அரசியல்களம் அறிந்தவர்கள்.
அதேநேரம் தேனி தொகுதியில் கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட ஆரம்ப காலம் முதல் தி.மு.க.,வில் இருந்துவருவோருக்கு ஒதுக்காமல், அ.தி.மு.க., - அ.ம.மு.க., போன்ற கட்சிக்கு சென்றுவிட்டு வந்த தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு ஒதுக்குவதா என்ற புகைச்சலும் கட்சிக்குள் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து