சீனாவை எதிர்க்க துணிவில்லை, கச்சத்தீவு பற்றி பேசலாமா: ஸ்டாலின் கேள்வி
"ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் பா.ஜ.,வை தி.மு.க., எதிர்க்கும். பழனிசாமி போல் சாக்கு சொல்ல மாட்டோம்" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலுாரில் தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் வந்தால் மட்டும் வருபவர்கள் நாங்கள் கிடையாது. மக்களோடு மக்களாக துணை நிற்போம். பொய்களையும் அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு வருகிறார், மோடி.
மக்களுக்கு நன்மை செய்யும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் துரோகம் செய்யும் பார்ட் டைம் அரசியல்வாதிகளை மக்களை புறக்கணிக்க வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை, விலையில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தி.மு.க., அரசு நிறைவேற்றியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் நீக்கம், ஜி.எஸ்.டி., வரியில் மாற்றம், டோல்கேட் மூடல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்துவது, வங்கிகளில் மினிமம் பேலன்ஸை நீக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றப்படும்.
சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக தொடந்து செயல்படும் இயக்கமாக தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மை மக்களின் முதுகில் குத்தியவர் பழனிசாமி, இப்போது பா.ஜ.., வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு புதிதாக அக்கறை வந்தது போல நடிக்கிறார்.
அ.தி.மு.க.,வும் பா.ம.க.,வும் ஆதரித்ததால் தான் நாட்டில் சி.ஏ.ஏ., நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வளவு துரோகத்தை செய்துவிட்டு, 'இப்போது எதிர்க்கிறோம்' எனச் சொல்வது பசப்பு நாடகம்.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்தபோது, தி.மு.க., எம்.பி.,க்கள் கடுமையாக போராடினர். ஆனால், 'எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்' என பழனிசாமி பேசினார்.
இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய 8000 பேர் மீது வழக்கு போட்டு மோடிக்கும் அமித்ஷாவுக்கும் விசுவாசத்தை காட்டினார், பழனிசாமி. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சி.ஏ.ஏ., ரத்து செய்யப்படும்.
'நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்... எப்படி மோடியை எதிர்க்க முடியும்' என்கிறார் பழனிசாமி. மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவந்த போது பா.ஜ., காலில் விழுந்து கிடந்தாரா?
ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் பா.ஜ.,வை தி.மு.க., எதிர்க்கும். பழனிசாமி போல் சாக்கு சொல்ல மாட்டோம். மாநிலங்களே இல்லாமல் ஆட்சி செய்ய மோடி நினைக்கிறார். மாநில உரிமைகளை மோடி பறிக்கிறார். தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்களை தர மறுக்கிறார்.
விளம்பரத்திற்காக ஊருக்கு தகுந்த உடையை மட்டும் சரியாக அணிந்து செல்கிறார் பிரதமர். சம்ஸ்கிருதத்திற்கு அள்ளித் தருகிறார், தமிழ் மொழிக்கு கிள்ளி தருகிறார்.
எத்தனை முறை இலங்கைக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை அதிபரை சந்தித்த போது கச்சத்தீவு இந்தியாவுக்கு தான் சொந்தம் என அவர் சொல்லவில்லையே ஏன்?
கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கை மனுவையாவது படித்து பார்த்தார்களா. 2015ல் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது கிடையாது என தகவல் கொடுத்தனர். தேர்தல் வருவதால் தகவல்களை மாற்றி அந்தர் பல்டி அடிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக பார்லிமென்ட்டில் எத்தனையோ முறை கச்சத்தீவு பற்றி கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் தரவில்லை. தகவல் அரியும் உரிமை சட்டத்தின் படி எப்படி தவறான தகவல் தந்தனர்?
பா.ஜ.,வை சேர்ந்த தனிநபருக்கு எந்தவகையில் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கொடுத்தனர். கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த போது இலங்கையை பிரதமர் கண்டிக்கவில்லை.
அருணாச்சலில் உள்ள பல பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது, 30க்கும் மேற்ப்ட்ட இடங்களுக்கு பெயர் வைத்துள்ளது. இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சனத்தில் கச்சத்தீவு பற்றிப் பேசலாமா?
டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்க்கன்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் மீதான கைது நடவடிக்கைகள், எவ்வளவு பெரிய தவறு என்பதை பா.ஜ., விரைவில் உணரப்போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து