பூத் கமிட்டி பணம் 'ஆட்டை' : கொந்தளித்தவருக்கு கும்மாங்குத்து
தேர்தல் செலவுக்காக 'பூத்' கமிட்டிக்கு கொடுத்த பணத்தில் கை வைத்த ஒன்றிய செயலரை தட்டிக்கேட்ட, தி.மு.க., ஐ.டி., விங் அமைப்பாளர் தாக்கப்பட்டார்.
திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க.,வில், துறையூர் மேற்கு ஒன்றிய செயலராக இருப்பவர் வீரபுத்திரன். இவர் பல கட்சிகளில் இருந்து தி.மு.க.,வுக்கு வந்து, சமீபத்தில் ஒன்றிய செயலர் ஆனார். துறையூர் சட்டசபை தொகுதி, பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் உள்ளது. இங்கு தி.மு.க., சார்பில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் மகன் அருண் போட்டியிடுவது உறுதியாகி, அறிவிப்பு வரும்முன்பே, தொகுதி முழுதும் முக்கிய நபர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தொகுதியில் பூத் கமிட்டிக்கு, முதற்கட்டமாக, 5 ஆயிரம் ரூபாய், அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் வாயிலாக வழங்கப்பட்டது.
அதில், ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை நிர்வாகிகளுக்கு கொடுத்தார் வீரபுத்திரன். இதை, வடக்கு மாவட்ட தி.மு.க., ஐ.டி., விங் நிர்வாகி, பொன்னுசங்கம்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவர், தி.மு.க., நிர்வாகிகளுக்கான வாட்ஸாப் குரூப்பில் பதிவிட்டு, தட்டிக்கேட்டார்.
இதனால் வீரபுத்திரன் தரப்பு ஆத்திரம் அடைந்து, கடந்த, 13ம் தேதி கண்ணணுாரில் நடந்த திண்ணை பிரசாரத்தின் போது, சேகரை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த சேகரும், தாக்கிய தரப்பும் துறையூர் மருத்துவமனையில் சேர்ந்தனர். அமைச்சர் மகன் தொகுதி விவகாரம் என்பதால், உடனடியாக களமிறங்கிய, தி.மு.க., மேல்மட்ட நிர்வாகிகள், சேகரை சமாதானப்படுத்தி, மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்றனர்.
மேலும், பூத் கமிட்டி பணத்தை முறையாக வினியோகம் செய்யாத வீரபுத்திரனை, பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தி உள்ளனர். அவரோ, இனி தவறுகள் நடக்காது, காலில் கூட விழுகிறேன் என்று கூறி, பதவியை தக்க வைத்துக்கொண்டார். இவ்விவகாரத்தால் அமைச்சர் நேரு, ஒன்றிய செயலர் வீரபுத்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
வாசகர் கருத்து