'பூத் கமிட்டி' நிர்வாகிகளுக்கு பா.ஜ.,வில் பலத்த 'கவனிப்பு'
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், ஓட்டுச்சாவடியில் முழு கவனத்துடன் பணிபுரிய, 'பூத் கமிட்டி' நிர்வாகிகளுக்கு பா.ஜ., 'கவனிப்பு' செய்து உள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 68,000 ஓட்டுச்சாவடிகளில், பா.ஜ.,வுக்கு 60,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பூத் கமிட்டிகள் உள்ளன.
ஒரு பூத் கமிட்டியில், 10 - 12 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஐந்து பூத் கமிட்டிக்கு தலா ஒரு சக்தி கேந்திர பொறுப்பாளர் உள்ளார்.
பூத் கமிட்டியில் உள்ளவர்கள் தான், தேர்தலின்போது ஓட்டுச்சாவடியில் இருப்பர்.
அவர்கள், தங்கள் பூத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப்பதிவு செய்தனரா; மற்ற கட்சிகளின் சார்பில் ஒரே நபர் அதிக ஓட்டுகளை போடுகிறாரா போன்றவற்றை கண்காணிப்பர். மற்ற கட்சிகள் முகவர் தவறு செய்தால், வேட்பாளருக்கு தகவல் தெரிவிப்பார்.
இதனால் தான், திராவிட கட்சிகள் ஒரு பூத் கமிட்டிக்கு நிறைய செலவிடுகின்றன. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை, பா.ஜ., ஒருபோதும் ஏற்காது.
அதேசமயம், சொந்த தொழிலை விட்டு, ஒரு மாதமாக தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சியினரை கவனிக்க வேண்டும்.
எனவே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பா.ஜ., சார்பில் ஒரு பூத் கமிட்டிக்கு ஏற்கனவே தலா, 10,000 ரூபாய் கவனிப்பு செய்யப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, தற்போது அதே, 'கவனிப்பு' செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இரு தினங்களுக்கு முன், ஏற்கனவே வழங்கியதை இரு மடங்கு வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து