'ஓ.பி.எஸ்., பணத்தால் அடிக்கிறார்; நான் பாசத்தால் ஜெயிப்பேன்'

எம்.ஜி.ஆரின் மதிப்பை பெற்ற ஒன்றிய செயலர் தங்கவேலுவின் மகன் தான் தங்கதமிழ்செல்வன். போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சை எதிர்த்து, தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். களத்தில் அதிரடியுடன், களேபரம் காட்டும் இவர், தேர்தல் களத்திற்கு அளித்த பேட்டி:

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சை எதிர்த்து போட்டியிட உங்களை விட்டால், வேறு சரியான ஆள் இல்லையா?இருக்காங்க... நிறைய நிர்வாகிகள் உள்ளனர். ஒரு தொண்டனை நிற்க வைத்தாலும், துணை முதல்வரை ஜெயிக்க முடியும். ஆனால், மாவட்ட பொறுப்பாளர் என்பதால், அங்கீகாரம் கொடுத்து, 'சீட்' கொடுக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான்.

தி.மு.க., உங்களை, 'பலிகடா' ஆக்கிவிட்டது என்கிறார்களே?ஸ்டாலின் சிறந்த வேட்பாளராக, என்னை தேர்வு செய்திருக்கும் போது, பலிகடா எப்படி ஆக முடியும். அதாவது, ஓ.பி.எஸ்.,சை எதிர்த்து நிற்க, தங்கதமிழ்செல்வனுக்கு தகுதி இருப்பதாக, தொகுதி மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை உணர்ந்த தலைவர், எனக்கு வாய்ப்பளித்துள்ளார்.நீங்கள் எப்போதும், ஓ.பி.எஸ்.,சை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள்.

ஆனால், அவர் உங்களை நண்பர் என்று தானே குறிப்பிடுகிறார்?அவர் சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றே, நான் சொல்வேன். நண்பர் என்பதற்கு அர்த்தம்தெரியாதவர். நடித்தே பதவிக்கு வந்தவர். மக்களிடம் நடிச்சே முதல்வரானார்; இது உண்மை. 1989ல், இதே போடி தொகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேவல் சின்னத்தில்போட்டியிட்ட போது, எதிரணியின் வேட்பாளராக, ஜானகி அணியில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா நிறுத்தப்பட்டார்.

அப்போது, அந்த நடிகைக்கு ஓ.பி.எஸ்., 'பவர் ஏஜன்ட்' ஆக, ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்பட்டார். அன்று ஜெ., தோற்றிருந்தால், அவரின் அரசியல் வாழ்க்கையே இல்லாமல் போயிருக்கும். ஓ.பி.எஸ்., ஒரு போதும் யாருக்கும், எவருக்கும் நண்பராக வாய்ப்பில்லை.

போடியில், துணை முதல்வரை எதிர்த்து, உங்களால் வெற்றி பெற முடியுமா?அவர் பணத்தால் அடிக்கிறார்; நான் பாசத்தால் ஜெயித்து விடலாம் என, நினைக்கிறேன்.

நீங்கள் தினகரனுடன் சென்று தவறு செய்து வீட்டீர்கள் என, உங்கள் மீது பரிதாபப்படுகிறாரே துணை முதல்வர்?சசிகலா நல்லவர்; அவங்க மீது பழிச்சொல் வரக்கூடாது என்பதற்காகவே, தர்மயுத்தம் தொடங்கினேன் என, 'டிவி' பேட்டியில் ஓ.பி.எஸ்., சொல்கிறார். நான் கேட்கிறேன், அம்மா சமாதியில் உட்கார்ந்து, சசிகலா குடும்பத்தினர் தான், அம்மாவை அடித்து கொலை செய்தார்கள். தெருத்தெருவாக கூட்டம் போட்டு, 1 கோடி ரூபாய் செலவு செய்து பேசினார். இ.பி.எஸ்., அரசு ஊழல் அரசுன்னு பேசினார். இன்று சசிகலா நல்லவருன்னு சொல்றாரு. அதனால் தான், அவரைசந்தர்ப்பவாதி என்கிறேன்.

போடி தொகுதியின் பல இடங்களில், ஓ.பி.எஸ்., ஓட்டு கேட்டு போக முடியாத சூழல் இருக்கிறதாமே?திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகள், விசேஷங்கள் என, தொகுதி மக்களின், நல்ல, கெட்ட விஷயங்களில், மக்களோடு மக்களாக பங்கேற்க வேண்டும். அதை விட்டுட்டு அம்பானி வீட்டு நிகழ்வுகளுக்கு தனி விமானத்தில் போகிறார். தனி விமானத்தில் போவதற்கு யார் காரணம், போடி தொகுதி மக்கள் ஓட்டுப்போட்டது தானே காரணம். ஓட்டளித்த மக்களுக்கு, ஒன்றுமே செய்யாததே வெறுப்புக்கு காரணம்.

அ.ம.மு.க.,வில் இருந்த போது, உங்கள் குரல் ஓங்கி ஒலித்தது. தி.மு.க.,வில் சேர்ந்ததும் அமைதியாகி விட்டீர்களே?மாவட்ட செயலராக, காலை முதல் மாலை வரை கட்சிப் பணியாற்றியதாலும், மீடியாக்கள்கூப்பிட்டாலும் அதை தவிர்த்து வந்தேன். வேலைப்பளுவே காரணம்.

தேர்தல் கருத்து கணிப்புக்கள், தி.மு.க.,வுக்கு சாதகமாக வெளியிடப்படுகின்றன என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?அப்பட்டமான பொய் அது. மக்களின் கருத்துக்களையே, பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அதை தவறு என, கூறுவதே தவறு.

முதல்வர் இ.பி.எஸ்., உங்களையும், செந்தில் பாலாஜியையும் கடுமையாக விமர்சிக்கிறாரே?இ.பி.எஸ்., சசிகலா காலில் விழுந்து முதல்வரானார்; கண்ணீர் விட்டார். 5 நிமிடம் அவரால் பேச முடியவில்லை. நான் அவர் முன் புறம் சேரில் உட்கார்ந்திருந்தேன். அடுத்த, இரு மாதங்களில், சசிகலா துரோகின்னு பேசுகிறார். அவரு நம்பிக்கை துரோகியா, நாங்க நம்பிக்கை துரோகியா.துணை முதல்வரும், நீங்களும் கட்டாயம் ஓட்டுக்கு பணம் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில், வாக்காளர்கள் சிலர் இருப்பதாக தெரிகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பீர்களா?என் பிரசாரத்திற்கு தானாகவே கூட்டம் சேர்கிறது. துணை முதல்வரின் பிரசாரத்திற்கு வர, ஆள் ஒன்றுக்கு, 500 ரூபாய் கொடுப்பதுடன், சேலை, வேட்டி எல்லாம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள். நாங்கள் அப்படி அல்ல. பணம் கொடுக்காமலேயே, மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

தி.மு.க.,வின் பெரும் பெருந்தனக்காரர்களாக இருக்கும் பலரையும் குறிவைத்து வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகின்றனரே?போடியில கூட ரெய்டு நடந்திருக்கு. ஆளுங்கட்சி த.மா.கா., வுடன் கூட்டணி. எதுக்கு ரெய்டு நடத்தினார்கள் என தெரியவில்லை. ரெய்டால் பாதிக்கப்பட்டவர் எனக்கு ஆதரவு தருகிறார் என, ஓ.பி.எஸ்.,க்கு செய்தி போயிருச்சோ என்னவோ. தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினால் பயந்து விடுவோம் என, மத்திய அரசு தனக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. அதனால் தான் இது மக்கள் விரோத ஆட்சி.

மாற்றுக்கட்சியில் இருந்து, தி.மு.க.,விற்கு வருவோருக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற, குற்றச்சாட்டு இருக்கிறதே?அனைத்துக் கட்சிகளிலும் இருக்கும் நடைமுறை தானே இது; அவரவர் செல்வாக்கை பொறுத்து தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அதை தவறாக பேசினால், நாங்கள் என்ன பதில் சொல்வது.

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு இணையாக, அ.ம.மு.க.,வும் வலுவான கூட்டணி அமைத்து விட்டதாக தினகரன் கூறியிருக்கிறாரே?அன்று நான் போட்டியிட்ட கட்சி, அங்கீகாரம் இல்லாத கட்சி. இன்று நான் பலம் வாய்ந்த, தி.மு.க.,வின் சார்பில் போட்டியிடுகிறேன். அப்போது, அ.ம.மு.க.,வை மக்கள் அங்கீகரிக்கவில்லையே. அதில், நின்று வீரம் பேசுகிறார் தினகரன்.

அ.ம.மு.க.,வை உருவாக்கியவர்களில் நீங்களும் ஒருவர்தானே?சத்தியமாக நான் மட்டுமே இல்லை. நான் வேணாம் என்று தான் சொன்னேன். அதனால் தான், எங்களுக்குள் மனக்கசப்பே ஏற்பட்டது.

தி.மு.க., மட்டுமே, பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் எதிர்ப்பது ஏன்?நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, மும்மொழி கொள்கைக்கு பதிலாக இருமொழி கொள்கை, எய்ம்ஸ் மருத்துவமனை நிதி ஒதுக்காமல் இருப்பது, திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தையும் வழங்காமல் இருக்கிறது பா.ஜ., நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.அதனால், பா.ஜ.,வையும், பிரதமரையும் கண்டிக்கிறோம், பேசுகிறோம். இதில், என்ன தவறு இருக்கிறது.

அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், வாஷிங் மெஷின் வழங்கப்படும் என சொன்னது, மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அக்கட்சியினர் பேசுகின்றனரே?சாப்பாட்டிற்கே வழியில்லாமல் உள்ளவர்களுக்கு வாஷிங் மெஷின் கொடுத்து என்ன செய்வார்கள். மாதந்தோறும் நாங்கள் உரிமை தொகையாக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 என, ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் தருகிறோம். அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அவசரப்பட்டு தினகரன் பக்கம் போய், எம்.எல்.ஏ., பதவி பறிபோக காரணமாக இருந்திருக்க வேண்டாம் என என்றாவது நினைத்தது உண்டா?சத்தியமாக நினைத்தேன். நம்பி சென்றேன்; துரோகம் இழைத்தார்கள். நான் எப்போதும் வெளிப்படையாக இருப்பவன். என்னிடம் ஆசை வார்த்தை கூறி, ஆளும் கட்சியாக வந்து விடுவோம் என்றனர். திடமாக ஊழல் அரசை அகற்றலாம் என்ற, நம்பிக்கையில் போனேன்; கவிழ்ந்துவிட்டோம். தி.மு.க.,வை விட்டு வெளியேறி, காலையில் பா.ஜ.,வில் இணைந்த மதுரை சரவணனுக்கு, அன்று மாலையிலேயே சீட் வழங்கப்பட்டுள்ளதேநீங்கள் உடைத்தால் 'பொன்'குடம், நாங்கள் உடைத்தால் 'மண்'குடம் என்கிற கதையாகத்தான் இருக்கிறது. இது, அனைத்து கட்சியிலும் நடக்கக் கூடியதே.

சசிகலா பொது எதிரி, தி.மு.க., தான் என்றார். உங்களுடைய பொது எதிரி யார்?என்னோட பொது எதிரி, தற்போது நடக்கும் இ.பி.எஸ்.,சின் ஊழல் ஆட்சி தான். மிதமிஞ்சிய,கட்டுக்கடங்காத ஊழல் செய்துள்ளனர். மத்திய அரசுக்கு அடிபணிந்து, தமிழகத்தின் உரிமைகளை இழந்து, தன்மானத்தை இழந்து அரசியல் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)