களைகட்டியது தேர்தல் சூதாட்டம்
லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை மையப்படுத்தி, ஓட்டுப்பதிவுக்கு முன்பே சூதாட்டம் சூடுபிடித்து வருகிறது. லட்சக்கணக்கில் செலவிடும் இந்த சூதாட்டத்தில், அரசியல் ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு, நாளை, ஓட்டுப்பதிவு நடக்கிறது. வரும் ஜூன் 4ல், ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
ஓட்டுப்பதிவுக்கு முன், எந்த கட்சிக்கு சாதகம், பாதகம் என, ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், தேர்தல் முடிவுகள் குறித்து, சுவாரசியமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.
ஏஜென்டுகள் உண்டு
இதில் கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், மத்திய சென்னை, தென்சென்னை, வேலுார், கரூர், திருநெல்வேலி, தர்மபுரி போன்ற தொகுதிகள், வி.வி.ஐ.பி.,க்கள் தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன. அதை மையப்படுத்தி, ஒரு கும்பல் சூதாட்டத்தில் இறங்கியுள்ளது.
'பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை 'சீட்' கிடைக்கும்; எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்; எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் ' என பந்தயம் கட்ட துவங்கியுள்ளனர்.
இந்த சூதாட்டத்துக்கு, பல ஊர்களில் ஏஜென்டுகள் உள்ளனர். அவர்கள் வாயிலாகத்தான் இந்த அரசியல் சூதாட்டம் பரபரப்பாக நடக்கிறது.
மற்றொரு பக்கம், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், தங்களின் தலைவர்களின் வெற்றி உறுதி என, நம்பிக்கையுடன் பந்தயம் கட்டி வருகின்றனர். அவர்களுக்கு எதிரானோர், குறிப்பிட்ட தலைவர்கள் தோல்வி அடைவர் என சொல்லி பந்தயம் கட்டுகின்றனர்.
தனிப்பட்ட முறையில் பந்தயம் கட்டும் வசதி குறைவானோர், தங்களுக்குள் சிறிய அளவில் தொகை, ஆடு, மாடு, கோழி, பைக் என, சிறு, சிறு பொருட்களை பந்தயம் வைத்துள்ளனர்.
வசதி படைத்தோர், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், கார், வீடு, வீட்டு மனை, நிலம், கார் உள்ளிட்ட வாகனங்கள் என, விலை உயர்ந்த பொருட்களை பந்தயமாக வைத்துள்ளனர். வேட்பாளர்கள் எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர் என்பது குறித்தும், பந்தயம் ஜோராக நடக்கிறது.
இதில், சேலத்தில், வெள்ளி பொருட்கள் தயாரிப்பு அதிகளவில் உள்ளதால், 1 கிலோ வெள்ளிக்கு மேல், 'பெட்டிங்' கட்டுகின்றனர். சென்னையில், தங்கத்தின் மீதும், கோவையில் கார், நிலம் உள்ளிட்டவை மீதும், மதுரை, திருச்சி பகுதியில், பணம் மற்றும் கால்நடைகள் மீதும், 'பெட்டிங்' கட்டியுள்ளனர். சில இடங்களில், வெளிநாட்டு 'மது' பாட்டில் பார்ட்டியுடன், அசைவ விருந்து, 'உல்லாச' சுற்றுலா போன்றவையும் இடம் பெற்றுள்ளன. இந்த சூதாட்டத்தில், தொழிலதிபர்கள் பலர் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி தேர்தல் சூதாட்டத்தில் பந்தயம் கட்ட, 10க்கும் மேற்பட்ட கேள்விகள் தரப்படுகின்றன.
ஒவ்வொரு தேர்தலிலும் நடப்பதை காட்டிலும், இந்த முறை சூதாட்ட அடுக்குகள் அதிகம். முன்பெல்லாம் அ.தி.மு.க., -- தி.மு.க., இரண்டில் யாருக்கு அல்லது எந்த கூட்டணிக்கு வெற்றி என்று கேள்வி இருக்கும்.
தற்போது, சூதாட்ட களத்தில், பா.ஜ.,வும் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறை, மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்குமா? இந்தியாவில் யார் பிரதமராக வருவார்? தமிழகத்தில் பா.ஜ., தலைவர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் வெற்றி பெறுவரா? எனவும், தேர்தல் சூதாட்ட களம் சூடுபிடித்துள்ளது.
கூடுதல் எண்ணிக்கை
குறிப்பாக, கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை, போட்டியில் வெற்றி பெறுவாரா என்பதற்கே, சூதாட்ட களத்தில் பணம் கட்டியிருப்போரில் அதிகம் பேர் உள்ளனர். அவருக்கு அடுத்த நிலையில் பன்னீர்செல்வமும், தினகரனும் உள்ளனர். அண்ணாமலைக்காக பந்தயம் கட்டியிருப்போரில் சிலர், பெரிய தொகையாக பந்தயம் கட்டியுள்ளனர்.
கனிமொழியின் வெற்றிக்காக மட்டும் பெரிய அளவில் யாரும் பந்தயம் கட்டவில்லை என்ற தகவல் வருகிறது. ஏனென்றால், அது தெரிந்த முடிவு என்பதால் தான். விருதுநகரில் போட்டியிடும் நடிகை ராதிகா, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோருக்காக கட்டப்பட்ட பந்தயத்தில், நடிகை ராதிகா வெற்றி பெறுவார் என்று கூடுதல் எண்ணிக்கையிலும், பெரிய தொகைக்காகவும் பந்தயம் கட்டியுள்ளனர்.
அதேநேரம், திருச்சியில் போட்டியிடும் வைகோவின் மகன் துரை தோல்வியடைவார் என்று தி.மு.க.,வைச் சேர்ந்த பலரே சூதாட்டத்தில் பந்தயம் போட்டுள்ள தகவலும் வெளியாகி இருக்கிறது. பெரம்பலுாரில் போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் வெற்றியடைவார் என்றே நிறைய பேர் பந்தயம் போட்டுள்ளனர்.
வாசகர் கருத்து