'சசிகலா வசம் அ.தி.மு.க., போவதற்கு வாய்ப்பே இல்லை': உறுதியாக சொல்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க.,வில் அடிமட்டத் தொண்டனும், அமைச்சராக முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம், தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். 'கேபிள் டிவி' ஆபரேட்டராக இருந்து, அரசு கேபிள் டிவி தலைவர், எம்.எல்.ஏ., அமைச்சர் என, அரசியலில் பல படிகள்முன்னேறியவரும், அ.தி.மு.க., ஆட்சி நீடிப்பதற்கு முக்கிய பங்காற்றியவருமான அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கால்நடை மருந்தகங்களில், போதுமான கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள், மருந்துகள் இல்லாத நிலை இருக்கிறது. அதை சரி செய்ய, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, புகார்கள் வருகின்றனவே...மருந்துகளை சுகாதாரத் துறை தான், கொள்முதல் செய்து தருகிறது. மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. ஆண்டுக்கு, 400 கால்நடை மருத்துவர்கள் தான் வெளியில் வருகிறார்கள். தமிழகத்தில் படிக்கும், கால்நடை மருத்துவர்களுக்கு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில், பெரிய வரவேற்பு இருப்பதால், அங்கு சென்று விடுகின்றனர். இந்த ஆண்டு, மூன்று கால்நடை மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட்டு உள்ளதால், நடப்பாண்டில், 120 பேரும், அடுத்த ஆண்டில், 240 மருத்துவர்களும் வெளியில் வருவர். அதன்பின்கால்நடை மருத்துவர் பற்றாக்குறையும் தீரும்.

இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது ஏன்?அது, 2011ல், ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டம். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் மகளிருக்கு, வெள்ளாடுகள் கொடுப்பது என்றும், 12 ஆயிரத்து, 500 பேருக்கு கறவை மாடுகள் தருவது என்றும் முடிவானது. இந்த ஆண்டில் தான், ஆண்டுக்கு, இரண்டு லட்சம் பேருக்கு நாட்டு கோழிக்குஞ்சுகள் தரும் திட்டத்தை முதல்வர் இ.பி.எஸ்., துவக்கினார். இதுவரை, 12 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடுகளும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு கறவை மாடுகளும், ஐந்துலட்சம் பெண்களுக்கு நாட்டு கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டுள்ளன.

அரசு வழங்கிய ஆடு, மாடுகள், கோழிக்குஞ்சுகளை பலர் விற்றுவிட்டார்களே... திட்டம் தோல்வியடைந்து விட்டதா?அப்படிச் சொல்ல முடியாது. பலர் பண்ணை வைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். சிலர் விற்று இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இத்திட்டத்தில் பயன் பெறுவோர், ஓராண்டுக்கு அவற்றை விற்கக்கூடாது என்று, டாக்டர்கள் குழுக்கள் வாயிலாக கண்காணிக்கிறோம். அந்த விழிப்புணர்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

கால்நடைத் துறை அமைச்சராக, நீங்கள் பெருமிதம் கொள்ளும் விஷயம் எது?சேலம் மாவட்டம் தலைவாசலில், உலகத் தரத்தோடு கால்நடை பூங்கா அமைப்பது தான். இதை அமைக்கும் முன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு, என்னை முதல்வர் இ.பி.எஸ்., அனுப்பி வைத்தார். அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்த்து வந்து, அதைப் பற்றி விளக்கினேன். அதன் விளைவு, கால்நடைத்துறைக்கு சொந்தமான, 1,200 ஏக்கர் பரப்பில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பிரமாண்டமாக அந்த பூங்கா உருவாகியிருக்கிறது. ஆடு, மாடு, கோழியினங்கள், மீன்கள் வளர்ப்பு, நாட்டினங்கள் பாதுகாப்பு, இனப்பெருக்கம், தீவன உற்பத்தி, ஆராய்ச்சி, விற்பனை என, எல்லாமே ஒரே வளாகத்தில் நடக்கும். அதனால், விவசாயிகள்,மக்கள் பெரிதும் பயனடைவர்.

வீட்டு வசதித் துறை, ஜெயலலிதா உங்களுக்கு அளித்த பதவி. ஓ.பி.எஸ்.,சுக்காக, அந்தத் துறை உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதில், உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா?அது, முதல்வரின் விருப்பம். ஜெயலலிதா கொடுத்த வீட்டு வசதித் துறையில் சிறப்பாகப் பணியாற்றினேன். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சராக இருந்த போது அவரிடம் சென்று, 10 லட்சம் வீடுகள் கட்ட நிதியைப் பெற்று, நான் இருக்கும் போதே, ஐந்து லட்சம் வீடுகளை கட்டினேன். ஜெ., என்னைப் பெரிதும் பாராட்டினார். அதேபோல, சி.எம்.டி.ஏ., எல்லையை விரிவாக்கம் செய்ததும், என்னுடைய காலத்தில் தான். அது, நகர்ப்புற மேம்பாட்டுக்கான துறை. இப்போது கொடுத்துள்ள கால்நடைத் துறையில், கிராமத்து மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவுவதை பெரும் ஆத்மதிருப்தியாக நினைக்கிறேன்.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டடங்களுக்கும், 60 நாட்களுக்குள் ஒற்றைச்சாளர முறையில் திட்ட அனுமதி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது முடியுமா?அது, ஒன்றும் தி.மு.க., கண்டுபிடித்த திட்டமில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்திலேயே, ஒற்றைச்சாளர முறையை நாங்கள் அறிமுகம் செய்து விட்டோம். எல்லாவிதமான அனுமதியையும், ஆன்லைன் முறையில் கொண்டு வந்து, பிற துறைகளின் ஒப்புதல் குறிப்பிட்ட நாட்களுக்குள் கிடைக்காவிடினும் அனுமதி தரலாம் என்ற, நிலையை உருவாக்கியுள்ளோம்.

அ.தி.மு.க., அமைச்சர்களில், சசிகலா குடும்பத்தின் தீவிர ஆதரவாளர்கள் என, வரிசைப்படுத்தப்படும் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்களே?ஒரு காலகட்டத்தில், எல்லோருமே அவருடைய ஆதரவாளராக இருந்தோம். அதில், மாற்றுக்கருத்து இல்லை. ஒரு கட்டத்திற்குப் பின், சசிகலா சிறை சென்ற பின், முதல்வர் இ.பி.எஸ்.,கட்டுப்பாட்டில் இருப்பது என்று எல்லோரும் முடிவெடுத்தோம். எந்தத் தலைமையின் கீழிருந்தாலும், அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே, என் நிலைப்பாடு. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியடைந்தால், சசிகலா வசம் கட்சி போய்விடும் என்கிறார்களே...அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இந்தக் கட்சியும், ஆட்சியும் நுாறாண்டு நீடிக்குமென்று ஜெயலலிதா சொன்னார். அதற்கேற்ப சிறப்பான ஆட்சியை முதல்வர் இ.பி.எஸ்., கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்தச் சூழ்நிலையை எதிர்பார்த்தே, சசிகலா அமைதி அரசியல் செய்வதாகவும் சொல்கிறார்களே?அது, பத்திரிகை பரபரப்புக்காக சொல்லப்படும் யூகம். அமைச்சர் வேலுமணி சார்ந்துள்ள கோவையில் மட்டும், ஏகப்பட்ட வளர்ச்சி பணிகள் நடந்திருக்கின்றன.

நீங்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்தும், உங்கள் பகுதிக்கு எதையும் செய்யவில்லை என்ற, குற்றச்சாட்டு இருக்கிறதே?அப்படி சொல்ல முடியாது. அவருடைய உள்ளாட்சி துறையின் கீழ் தான், உடுமலை நகராட்சியில் மட்டும், 125 கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்கின்றன. திருப்பூரில், 1,200 கோடி ரூபாய்க்கு, 'ஸ்மார்ட் சிட்டி' பணி நடக்கிறது. திருப்பூருக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வந்திருக்கிறது. 40 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு, 300 கோடி ரூபாய் மதிப்பில், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக கோவை இருப்பதால், அங்கு அதிகளவிலான பணிகள் நடக்கின்றன.

அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கேபிள் இணைப்பு இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது... அது சாத்தியமா?அது சாத்தியம் தான். அதை எங்களால் மட்டும் தான் செய்ய முடியும்.

சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு, இவ்வளவு சொத்துக்கள் வந்தது எப்படி என, எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனரே?ஒருவர் பிறக்கும் போது எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இருக்க வேண்டுமா... நான் கேபிள் டிவி ஆபரேட்டராக பல ஆண்டுகள் இருந்து இருக்கிறேன். கோழிப்பண்ணை வைத்திருக்கிறேன். நான் தொழில் செய்து சம்பாதிக்கிறேன்.முழுநேர அரசியல்வாதிகளான கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் எப்படி இவ்வளவு சொத்து வந்தது... அரசியல்வாதி தொழிலே செய்யக்கூடாது என்றால், என்ன நியாயம்?

கொங்கு மண்டலத்தில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தோல்விக்கு பொள்ளாச்சி பாலியல் விவகாரமே காரணமாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.இந்தத் தேர்தலில், உடுமலை பகுதியிலும் இது எதிரொலிக்குமா?அந்தத் தேர்தலில், தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் தான் தோல்விக்கு காரணம். அதேநேரத்தில், அப்போது நடந்த இடைத்தேர்தலில், நாங்கள் ஜெயித்தோம். உள்ளாட்சி தேர்தலில், பெருவாரியான வெற்றிகளை பெற்றோம். அதனால், அந்தவிவகாரம் ஒரு காரணமென்று சொல்ல முடியாது. இந்தத் தேர்தலிலும், அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)