ஓட்டு வித்தியாசம் தான் பா.ஜ.,வுக்கு பிரச்னை!
சத்தீஸ்கரில் இதுவரை நடந்துள்ள லோக்சபா தேர்தல்களில், பா.ஜ., இரண்டு தொகுதிகளுக்கு மேல் தோல்வியடைந்ததில்லை. இந்த முறை, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என்பதில் பா.ஜ., உறுதியாக உள்ளது. கட்சியின் தற்போதைய இலக்கு, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதுதான்.
கடந்த 2000ம் ஆண்டு, மத்திய பிரதேசத்தில் இருந்து, சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்கு லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. கடந்த, 2004, 2009, 2014ல், மாநிலத்தில் உள்ள, 11 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., 10ல் வென்றது. காங்கிரஸ் ஒன்றில் வென்றது. கடந்த, 2019 தேர்தலில் காங்., இரண்டில் வென்றது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா என, ஏழு மாநிலங்களுடன் எல்லை பகிர்ந்து கொள்கிறது சத்தீஸ்கர். இதனால் கலவையான கலாசாரங்கள் உள்ள இந்த மாநிலம், பா.ஜ.,வின் கோட்டைகளில் ஒன்றாக உள்ளது.
இதுவரை, ஆறுமுறை நடந்த சட்டசபை தேர்தல்களில், நான்கு முறை பா.ஜ., வென்றுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் வித்தியாசமான வியூகங்களை வகுத்து, வெற்றியை பா.ஜ., சுவைத்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, 11 லோக்சபா தொகுதிகளுக்கும் புதுமுகங்களை பா.ஜ., களமிறக்கி, ஒன்பதில் வென்றது.
இந்த முறை, அந்த ஒன்பதில், இரண்டு பேருக்கு மட்டுமே மறு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சட்டசபையின் மூத்த உறுப்பினர்களான பிரிஜ்மோகன் அகர்வால், விஜய் பாகெல், சரோஜ் பாண்டேவுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் இன்னும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது. சுக்லாக்கள், ஜோகிக்கள் போன்ற பழைய தலைவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையே சுற்றி சுற்றி வருகிறது. இதனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. வாய்ப்பும் தரப்படுவதில்லை.
இப்போதும், கடந்தாண்டு டிசம்பர் வரை முதல்வராக இருந்த பூபேஷ் பாகெல், முன்னாள் துணை முதல்வர்கள் டி.எஸ்.சிங்தியோ, தம்ரத்வாஜ் சாஹு, முன்னாள் அமைச்சர்கள், லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
முதல் முறையாக முதல்வராகியுள்ள விஷ்ணு தியோ சாய், பா.ஜ.,வின் தேர்தல் உறுதிமொழிகளான, பெண்களுக்கு, மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ், 70 லட்சம் பெண்களுக்கு வழங்கத் துவங்கியுள்ளார். மேலும் நெல்லுக்கு, கூடுதலாக குறைந்த ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதற்கு மானியம் போன்றவற்றை, மாநில அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய இலக்கு, அனைத்து தொகுதிகளிலும், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதுதான்.
வாசகர் கருத்து