வரலாறு காங்கிரசுக்கு சாதகமாக இல்லை!
ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில், தொடர்ந்து மூன்றாவது முறையாக அனைத்திலும் வெற்றி பெறும் முயற்சியில் பா.ஜ., தீவிரமாக உள்ளது.
தலைநகர் ஜெய்ப்பூர் லோக்சபா தொகுதியில், 1952ல் இருந்து இதுவரை நடந்துள்ள, 17 லோக்சபா தேர்தல்களில், காங்கிரஸ், 1952, 1984 மற்றும் 2009 ஆகிய மூன்று முறை மட்டுமே வென்றது.
இந்த தொகுதி நீண்ட காலமாக, பா.ஜ.,வின் கோட்டையாக விளங்கி வருகிறது. கடந்த, 1989ல் இருந்து, 2009ம் ஆண்டு வரை, பா.ஜ.,வின் கிரிதாரி லால் பார்கவா, தொடர்ந்து ஆறு முறை வென்றார்.
தொடர்ந்து இருமுறை வென்ற, தற்போதைய எம்.பி.,யான ராமசரண் போராவின் செயல்பாடுகளில் திருப்தியில்லாததால், மஞ்சு சர்மாவை வேட்பாளராக, பா.ஜ., நிறுத்தியுள்ளது. இவர் மறைந்த மூத்த தலைவரும், அமைச்சருமான பன்வார் லால் சர்மாவின் மகள். இவர், ஹவா மஹால் சட்டசபை தொகுதியில், ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மஞ்சு சர்மா முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில், சுனில் சர்மா என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. ஆனால், ஹிந்துத்துவா அமைப்பு ஒன்றுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையால் நீக்கப்பட்டார். பிரதாப் சிங் கசாரியாவஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரசின் அசோக் கெலாட் முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார்.
இதற்குமுன், 2003ல் சட்ட சபை தேர்தலில் தோல்வியடைந்த இவர், 2004 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அதில் தோல்வியடைந்தார். சமீபத்திய சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததால், லோக்சபா தேர்தலில் போட்டியிட கசாரியாவஸ் தயக்கம் காட்டினார். தொகுதியின் வரலாறும், தன் சொந்த வரலாறும் அவர் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
வாசகர் கருத்து