பா.ஜ., வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் : கார்கே காட்டம்
"காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். ஆனால், கோடி கோடியாக நன்கொடை பெற்ற பா.ஜ., மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை வழங்கியவர்கள் குறித்த விவரங்களை, தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ வழங்கியது. இந்த விவரங்களை தேர்தல் கமிஷன், நேற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ., பல்லாயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடைந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில், பா.ஜ.,வுக்கு எதிரான பிரசார ஆயுதமாக தேர்தல் பத்திர விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
இந்நிலையில், பா.ஜ.,வின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
பாரத் ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேர்தல் பத்திரங்களின் வாயிலாக பா.ஜ.,வுக்கு 50 சதவீத நன்கொடை கிடைத்துள்ளன. நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் இந்திய தேசிய காங்கிரசுக்கு 11 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது.
இதில், சந்தேகத்துக்குரிய நன்கொடையாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் யார்... எந்த நிறுவனங்கள்... அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குப் பிறகு பல நிறுவனங்கள் நன்கொடை கொடுத்தது ஏன்... அந்த நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குமாறு அழுத்தம் கொடுத்தது யார்?
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர். இது கவலையளிக்கிறது. ஆனால், கோடி கோடியாக பணம் பெற்ற பா.ஜ., மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் பத்திரங்களின் வாயிலாக சட்டவிரோதமாக நிதி பெற்ற பா.ஜ.,வின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமையில் உயர்மட்ட விசாரணையை அமைக்க வேண்டும்.
இவ்வாறு கார்கே பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து