செங்குந்த முதலியார் புறக்கணிப்பு: ஓட்டுகளை இழக்கும் தி.மு.க.,
கரூர் சட்டசபை தொகுதியில், 2.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், பட்டியலினத்தவர்கள், முதலியார் உள்ளிட்ட சமூகத்தினரும் உள்ளனர். 25 சதவீதம் வரை ஓட்டு வங்கி உள்ள செங்குந்த முதலியார் சமூகத்தினரை, தி.மு.க., கூட்டணி கட்சியினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, அச்சமூகத்தினர் குமுறி வருகின்றனர்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கரூர் தொகுதியில், அரசியலில் கவுண்டர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருந்தாலும், இனாம்கரூர் நகராட்சியாக இருந்த வரை, அங்கு முதலியார்களுக்கு வாய்ப்பு இருந்தது. 2011ல் விரிவாக்கப்பட்ட நகராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க.,வில், முதலியார் சமூகத்தை சேர்ந்த செல்வ ராஜுக்கு, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி வாய்ப்பு வழங்கினார். துணை தலைவராக, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த காளியப்பன் தேர்வு செய்யப்பட்டார்.
இதே பார்முலாவில் தான், தி.மு.க.,வில் கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரூர் மாநகர வடக்கு பகுதி செயலர் கணேசன், தலைமையுடனான நெருக்கத்தை பயன்படுத்தி, தன் மனைவி கவிதாவுக்கு மேயர் பதவி வாங்கினார். துணை மேயராக, சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருவரும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தோர். முதலியார் சமுதாயத்திற்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக, மண்டல தலைவராக சக்திவேல் தேர்வு செய்யப்பட்டார்.
எப்போதும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக இருக்கும் முதலியார் சமுதாயம், கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., விற்கு ஓட்டளித்தனர். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் முதலியார் சமுதாயத்தை, தி.மு.க., புறக்கணித்து வந்துள்ளது.
இது அந்த சமுதாயத்தினர் மத்தியில், தி.மு.க., மீதும், அதன் கூட்டணி கட்சிகள் மீதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதை பயன்படுத்தி பிற அரசியல் கட்சியினர், முதலியார் சமுதாயத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஆனால், எங்கள் கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் ஜோதிமணி, முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை சந்திக்கவில்லை. அதனால் அவர் தங்களை புறக்கணிப்பதாக அச்சமுதாயத்தினர் கருதுகின்றனர்.
வரும் லோக்சபா தேர்தலில் முதலியார் சமுதாய ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு திரும்பும் பட்சத்தில், தி.மு.க., கூட்டணி குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை இழக்க நேரிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து