பழனிசாமியின் மிரட்டும் 'மெகா' கூட்டணி
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, லோக்சபா தேர்தலுக்கு, தங்கள் தலைமையில் 'மெகா' கூட்டணி அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.
தி.மு.க., கூட்டணியிலிருந்து ஏதேனும் கட்சிகள் வெளியேறி, தங்களிடம் வரும் என்றும் பழனிசாமி எதிர்பார்த்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, சில பிரதான கட்சிகள் பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து விட்டன.
பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் இப்போது வரை உறுதியாகவில்லை; தொடர்ந்து பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க., தரப்பில், புதிய தமிழகம் கட்சியுடனான பேச்சும் முதல் கட்டத்துடன் நிற்கிறது.
பெரிய கட்சிகள் எல்லாம் அ.தி.மு.க.,வில் சேரத் தயங்க, லெட்டர் பேடு கட்சிகள் எல்லாம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க, வரிசை கட்டி நிற்கின்றன. நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், திருவிழா போல் கூட்டம் குவிந்தது.
இதுவரை கேள்விப்படாத அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லாம், 'அ.தி.மு.க.,வில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம்' எனக் கூறி, அனைவரையும் மிரள வைக்கின்றனர். எல்லா கட்சிகளுக்கும் ஒரு சீட் ஒதுக்கினால், 40 தொகுதிகள் போதாதே என, அ.தி.மு.க.,வினரே 'கமென்ட்' அடிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில், லெட்டர் பேடு கட்சிகள் ஆதரவு தெரிவித்து, கடிதம் கொடுப்பது வழக்கமானது. ஜெயலலிதா இருந்தபோதும் இது நடந்தது. இவ்வாறு ஆதரவு கொடுக்கும் அமைப்புகள், அவற்றின் தகுதிக்கு ஏற்ப, 'ஏ, பி, சி' என, மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அதன்பின், அவர்கள் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்படும். தேர்தல் செலவுக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எல்லா கட்சிகளும் அ.தி.மு.க.,-வுடன் கூட்டணி அமைக்க ஏங்கி தவமிருந்த நிலையில் இருந்த அக்கட்சியை, இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டீர்களே? நாமக்கல் பொதுக்கூட்டத்தில் மெகா கூட்டணி அமைப்பேன் என்று பழனிசாமி முழங்கியது இதற்கு தானா?கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கும் போதே, அவரால் ஓ.பி.எஸ்., என்ன கதிக்கு ஆளானார் என்பது உங்கள் நினைவுக்கு வரவில்லையா?கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி.,
வாசகர் கருத்து