தி.மு.க., மீது அதிருப்தியில் முத்தரையர் அமைப்புகள்
திருச்சி மற்றும் பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளில் உள்ள, 12 சட்டசபை தொகுதிகளில் பெரும்பான்மை சமுதாயமாக முத்தரையர்கள் உள்ளனர். இன்றைய நிலையில், இவர்கள், தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, முத்தரையர் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:
முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி வளர்ச்சியை தடுக்கிறார் என்று, திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் நேரு மீது, எம்.எல்.ஏ.,வே வெளிப்படையாக பேசிய ஆடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திருச்சி மாவட்டத்தில் மற்றொரு முத்தரையர் சமுதாய எம்.எல்.ஏ.,வான காடுவெட்டி தியாகராஜன், அமைச்சர் நேருவின் தீவிர விசுவாசி. அவர் வெள்ளாளர் சமுதாயம் பற்றி அவதுாறாக பேசிய பிரச்னையில், அவரை அச்சமுதாய அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிற்க வைத்து, அழ வைத்து, மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டது. இது, முத்தரையர் சமுதாயத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் அமைக்கப்பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது முத்தரையர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், முதல்வர் நேரில் வர முடியாதா என்று கடும்அதிருப்தியை வெளிப்படுத்தி, பிரச்னை செய்தனர்.
இது தொடர்பாக, அவ்வமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இப்படியாக முத்தரையர் சமுதாயத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் தி.மு.க.,வால் நடப்பதால், வரும் தேர்தலில் திருச்சி, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளில், முத்தரையர் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைப்பது சந்தேகமே.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து