திருப்பூர் மாப்பிள்ளைக்கு அடித்த யோகம் வேட்பாளராக களமிறக்கும் அ.தி.மு.க.,?
திருப்பூர் தொகுதியில், அ.தி.மு.க., வின், 'மாஜி' எம்.பி.,க்கள், செலவை காரணம் காட்டி, இளைஞர்களுக்கு வழிவிடுவதாகக் கூறி ஒதுங்கிக் கொள்ள, இப்போது அந்த ஊர் மாப்பிள்ளையான நபருக்கு வேட்பாளர் ஆகும் யோகம் அடித்துள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், மும்முனை போட்டியை சமாளிக்க, செல்வாக்கான வேட்பாளரை களமிறக்க வேண்டுமென, அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆனால், கட்சியில் தொழிலதிபர்களாக இருக்கும் பலரும் 'எஸ்கேப்' ஆகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, திருப்பூர் தொகுதியில், சிட்டிங் எம்.பி., சுப்பராயனையே போட்டியிட வைக்க இந்திய கம்யூ., கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதால், அவருக்கு இருக்கும் அதிருப்தியால் அ.தி.மு.க., தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் எப்படியும் வெற்றி பெறுவார் என அக்கட்சித் தலைமை நம்புகிறது.
இதனால் பண பலம் மிக்கவரான முத்து வெங்கடேஸ்வரன் என்பவரை வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். குண்டடத்தில் இருந்து திருப்பூரில் பெண் எடுத்துள்ள, முத்து வெங்கடேஸ்வரன் ஏற்கனவே தே.மு.தி.க., மாவட்ட செயலராக இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வில் இணைந்து, மாநில ஜெ., பேரவை துணைச் செயலராகவும் இருக்கிறார்.
திருப்பூர் மாப்பிள்ளையான முத்து வெங்கடேஸ்வரனுக்கு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் சிபாரிசு இருப்பதால், திருப்பூர் தொகுதியில் போட்டியிட இம்முறை அவருக்கே வாய்ப்பு கிடைப்பது உறுதி என்கின்றனர் கட்சியினர்.
இதையடுத்து, தொகுதியில் தன்னுடைய ஆதரவாளர்கள் சிலரை அனுப்பி, தொகுதி மக்களை கவர என்னவெல்லாம் செய்ய வேண்டும்என்கிற தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கும் வெங்கடேஸ்வரன், இப்போதே தேர்தல் வேலையை துவங்கி விட்டார் என்றும் சொல்கின்றனர் கட்சியினர்.
வாசகர் கருத்து