சின்னம் பிரச்னையில் சிக்கிய சீமான் 2வது வேட்பாளர் பட்டியல் இழுபறி
சின்னம் பிரச்னையால், யாரும் போட்டியிட ஆர்வம் காட்டாததால், நாம் தமிழர் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு, இழுபறியாக உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் பல்வேறு தேர்தல்களில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. முந்தைய மூன்று தேர்தல்களில், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக, மற்ற கட்சிகளுக்கு முன்னதாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வந்த, கரும்பு விவசாயி சின்னத்தை, கர்நாடகாவை சேர்ந்த, பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு, இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கிவிட்டது. சின்னத்தை ஒதுக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கையும், டில்லி உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
இதனால், புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. சின்னம் பிரச்னையால், சீமான் பெரும் குழப்பத்தில் உள்ளார்.
கரும்பு விவசாயி சின்னம் இல்லாவிட்டால் போட்டியில் இருந்து விலகுவதாக, வேட்பாளர்கள் சிலர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால், 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு இழுபறியாக உள்ளது.
வாசகர் கருத்து