ராகுலின் 5 வாக்குறுதிகள் : ப.சிதம்பரம் விளக்கம்
"வேலையின்மையை பற்றியோ விலைவாசி உயர்வை பற்றியோ பிரதமர் மோடி பேசுவதில்லை" என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத் நியாய யாத்திரையின்போது, தேர்தலுக்காக ஐந்து வாக்குறுதிகளை ராகுல் காந்தி அறிவித்தார். இது குறித்து காரைக்குடியில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கினார்.
ப.சிதம்பரம் கூறியதாவது:
காங்கிரஸ் அறிவித்துள்ள ஐந்து தேர்தல் வாக்குறுதிகள் பா.ஜ.,வின் நடவடிக்கைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.
மத்திய அரசு மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் இன்றைய தேதியில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சி அமைத்தால் 30 லட்சம் காலி இடங்களையும் பூர்த்தி செய்வோம்.
உ.பி., காவலர் தேர்வுக்கு 48 லட்சம் பேர் எழுதினார், அதை 2 நாள்களில் ரத்து செய்தனர். கேள்வித்தாள் கசிவு என்பது பல குடும்பங்களின் வாழ்க்கையை நாசமாக்குகிறது. இப்படி ஒவ்வொரு தேர்வையும் ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இதனை தடுத்து யார் மூலம் வினாத்தாள் கசிகிறதோ, அவர்களிடம் இருந்து பெருந்தொகை இழப்பீடா பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
படித்தபிறகு பயிற்சி பெறுவது எங்கள் உரிமை என சட்டத்தை நிறைவேற்றி ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் உதவிதொகை தந்து இளைஞர்களை சேர்ப்போம்.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் ஊழியர் எண்ணிக்கையில் 1 சதவீதம் அப்ரண்டீஸ்களை எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
உணவு டெலிவரி செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைக்கு அவர்களுக்கு எந்தவிதமான சட்டப் பாதுகாப்பும் கிடையாது. அவர்களைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்படும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 5,000 கோடி வழங்கப்படும். ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் 10 கோடி வீதம் பிரித்து கொடுப்போம். இதன்மூலம் பல தொகுதிகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமூக இளைஞர்கள் நேரடியாக பயன்பெறுவர்.
இந்தியா முழுவதும் 8 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. 100 பட்டதாரிகளில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்த எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து கூறிவருகிறது. இதனை சரிசெய்வோம்.
வேலையின்மையை பற்றியோ, விலைவாசி உயர்வைப் பற்றியோ மோடி பேசுவது கிடையாது. பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு அடிக்கல் நாட்டியதை மட்டுமே பேசிவிட்டு மோடி சென்று விடுகிறார். தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது பாரத் ஸ்டேட் வங்கிக்கு தெரியும். யார் வாங்கினார்கள் என்பதை வெளியில் சொல்வதற்கு ஸ்டேட் வங்கி தயங்குகிறது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
வாசகர் கருத்து