காத்திருக்கும் அதிரடி காட்சிகள்

பஞ்சாபில், 13 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்த பஞ்சாபில் தற்போது ஆம் ஆத்மியின் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆட்சி நடக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரசும், அதற்கு அடுத்த இடத்தில் பா.ஜ.,வும் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையில் தான் பலப்பரீட்சை நடக்க உள்ளது.
இவர்களுடன், பிராந்திய கட்சிகளான சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் களம் காண்கின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்த அகாலி தளம், 2021ல் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியது. ஆனாலும், 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அதன் பின் நடந்த இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் மண்ணை கவ்வியது.
வரும் லோக்சபா தேர்தலில் விட்டதை பிடிக்கும் நோக்கில், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அவர்களை தாஜா செய்யும் வேலையில் அகாலி தளம் இறங்கியுள்ளது.
மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துவிட்ட ஆம் ஆத்மி, தங்கள் வழக்கமான இலவச அறிவிப்புகள் என்ற ஆயுதத்தை லோக்சபா தேர்தலில் பிரயோகிக்க திட்டமிட்டுள்ளது.
பா.ஜ.,வை பொறுத்தவரை, தற்போது துவங்கியுள்ள விவசாயிகள் போராட்டம் அவர்களுக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது. எனவே, பஞ்சாபில் எந்தவித அரசியல் அதிரடிகளிலும் அக்கட்சி இன்னும் இறங்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தின் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது.
வரும் லோக்சபா தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட காங்., தலைமையிலான இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி அங்கம் வகிக்கிறது. ஐந்து மாநிலங்களில் இவர்கள் இணைந்து போட்டியிட்டாலும், பஞ்சாபில் தனித்தனியாகவே களம் இறங்குகின்றனர்.
காரணம், பஞ்சாபின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், அங்கு ஆளும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால் தேர்தலில் படுதோல்வி அடையும், கட்சி அதன் அடையாளத்தையே இழக்கும் என, மூத்த தலைவர்கள் எச்சரித்ததால் இந்த முடிவுக்கு காங்., தலைமை சம்மதித்தது.
பஞ்சாப் தேர்தல்களை பொறுத்தவரை, 'ஆக் ஷன்' காட்சிகளுக்கும், அதிரடி அரசியலுக்கும் எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. இந்த முறையும் பல அதிரடிகள் அரங்கேற்ற அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.
வாசகர் கருத்து