காத்திருக்கும் அறிவாலயம் தொடரும் திருமா பிடிவாதம்
தி.மு.க., குழுவினரிடம் பேச்சு நடத்த, நேற்று மாலை அறிவாலயத்திற்கு திருமாவளவன் வருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. அவரது புறக்கணிப்பு குறித்து, அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ''சில தலைவர்களுக்கு சில வேலைகள் இருக்கலாம்,'' என்றார்.
ஆனால், இரண்டு தனித்தொகுதி; ஒரு பொதுத்தொகுதி என்பதில், திருமாவளவன் பிடிவாதம் காட்டுவது தான் இழுபறிக்கு காரணம் என, அறிவாலய வட்டாரம் சொல்கிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் கட்சி நிர்வாகிகளுடன் விடிய விடிய, திருமாவளவன் ஆலோசித்தார்.
அப்போது நிர்வாகிகள் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு தேர்தலிலும் நம் ஓட்டு வங்கி அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கவில்லை என்ற வருத்தம் தொடருகிறது. லோக்சபா தேர்தலில், மூன்று தொகுதிகள் என்பதில் சமரசம் கூடாது.
தி.மு.க., குழுவில் உள்ள அமைச்சர்கள், நம் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சொல்லவில்லை என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேச வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த காரணத்தால் தான், அறிவாலயத்தில் நேற்று நடந்த பேச்சுக்கு, திருமாவளவன் போகவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில்,திருமாவளவன் பேசியதாவது:
தி.மு.க., கூட்டணியில், முதல் கட்ட பேச்சில், மூன்று தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி வேண்டும் எனகூறியிருந்தோம்.
அடுத்த கட்டமாக இன்னும் பேசவில்லை. நான்கு தொகுதிகள் கேட்டது உண்மை. அதில், மூன்று தொகுதிகள் தான் தேவை என்ற அடிப்படையில், எங்களது கருத்தை கூறியுள்ளோம். விரைவில் தொகுதி பங்கீடு உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து