கலகலக்கும் காங்., கூடாரம்!

லோக்சபா தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பல மூத்த தலைவர்கள் வெளியேறி வருவது, கட்சி தலைமையை கலங்க வைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம், 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக, அசாமில் 14 தொகுதிகள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில் அசாமில், பா.ஜ., ஒன்பது தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் மூன்றில் வென்றது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மூத்த தலைவராக கட்சியில் இருந்து வெளியேறி வருவதால், இந்த முறை, அந்த மூன்று தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்குமா என காங்., தலைமை கவலையில் ஆழ்ந்துள்ளது.
இன்று யார் போவாரோ, என்று கட்சியின் மாநிலத் தலைவர் புபேன் குமார் போரா, ஒவ்வொரு நாளும் திக் திக் மனநிலையிலே உள்ளார்.
இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ரானா கோஸ்வாமி, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார். அவரை இருகரம் நீட்டி, பா.ஜ., அணைத்து கொண்டது. கட்சியில் சேர்ந்த, 72 மணி நேரத்தில், அசாம் மாநில பா.ஜ., துணைத் தலைவராக ரானா கோஸ்வாமி நியமிக்கப்பட்டார்.
கடந்த ஜன., மாத இறுதியில், காங்., முன்னாள் தலைவர் ராகுலின் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை, அசாம் வழியாக கடந்து சென்றது. அதற்கடுத்த நாட்களிலேயே, காங்கிரசின் அசாம் மாநில மற்றொரு செயல் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கமலாக்யா தேவ் புர்க்கயஸ்தா, கட்சியில் இருந்து வெளியேறினார்.
மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளில் பா.ஜ., முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சிறப்பாக செயல்படுவதால், அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அவரைப் பின்பற்றி மற்றொரு எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான பசந்த தாசும், கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் தேர்வு நடக்கும்போது, மேலும் பல தலைவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறுவர் என்று பரவலாக பேசப்படுகிறது. இதனால், வரும் தேர்தலில், அசாம் மாநிலம் பா.ஜ.,வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி உறுதி
வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் உள்ள, 25 லோக்சபா தொகுதிகளில், 22ல் பா.ஜ., வெற்றி பெறும். மூன்று தொகுதிகளில் மட்டுமே இழுபறியாக உள்ளது. மற்ற தொகுதிகளில் எந்தவிதமான நெருக்கடியும் இன்றி எளிதாக வெற்றி பெறுவோம். வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டுமே பா.ஜ., வின் இலக்கு.
ஹிமந்த பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
வாசகர் கருத்து