குதிரைகள் தப்பி ஓடிய பின் லாயத்தை பூட்டி என்ன பயன்?

போட்டி போட்டுக் கொண்டு, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள், தேர்தல்அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. வீட்டில் ஒருவருக்கு வேலை; வீடற்றவருக்கு, 'கான்கிரீட்' வீடு; மாதம், 1,500 ரூபாய்; 'வாஷிங் மெஷின்;' ஆண்டுக்கு, ஆறு எரிவாயு சிலிண்டர் இலவசம், இவையெல்லாம், ஆளும் அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் 'ஹைலைட்...'

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மாதம், 1,000 ரூபாய்; சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்;பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; கொரோனா நிவாரணம், 4,000 ரூபாய்; பால் விலை குறைப்பு போன்றவை முக்கியமான அறிவிப்புகள். ஆட்சிக்கு வந்தால், இதை இதை எல்லாம் நிறைவேற்றுவோம் என, வாக்குறுதிகள் அளித்தாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா; நிதி ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்பதற்கு, தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகள் பதில் சொல்ல வேண்டும்.

கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசியதால், தமிழக வழக்கறிஞர் சுப்ரமணியம் பாலாஜி என்பவர், 2013ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக, உரிய வழிமுறைகளை, தேர்தல் கமிஷன் வகுக்கும்படிஉத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் கமிஷன் வழிமுறைகளை வகுத்தது. அதன்படி, கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையின் நகலை பெற்று, ஆய்வு செய்து, தேர்தல் கமிஷனுக்குகருத்துக்களை தெரிவிக்கும்படி, தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்து, எவ்வளவு நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற, காலக்கெடு எதுவும் இல்லாததால், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் அறிக்கைகள் குறித்த முடிவை, தேர்தல் முடிந்த பின் தான், கமிஷன் வெளியிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்ற சாத்தியம் உள்ளதா; இல்லையா என்பதை, ஓட்டுப் பதிவுக்கு முன்பே, வாக்காளர்களுக்கு தெரிந்தால் தான், அரசியல் கட்சிகள் மீதான நம்பகத்தன்மை குறித்து முடிவெடுக்க முடியும்.

வாக்குறுதிகளை நம்பி, ஓட்டுப் பதிவு செய்த பின், சாத்தியம் இல்லை என தெரிய வந்தால், யாருக்கு பலன்? அரசியல் கட்சிகள், ஓட்டுகளை அறுவடை செய்து விட்டு போய் விடும்; ஓட்டுப் போட்ட மக்களின் நிலை என்ன? அடுத்த தேர்தல் வரை, அவர்கள் காத்திருக்க வேண்டும்.எனவே, தேர்தல் கமிஷன், இந்த விஷயத்தில் காலக்கெடு நிர்ணயித்து, செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை பெற்று, உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சாத்தியக்கூறான திட்டங்கள் குறித்த தங்கள் முடிவுகளை, வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கைகள் விஷயத்தில் முடிவெடுக்க, கால அட்டவணை நிர்ணயிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த, 'கோவை கன்ஸ்யூமர் காஸ்' என்ற அமைப்பு வழக்கு தொடுத்தது. மனுவை பரிசீலித்து, இரண்டு மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க, தேர்தல் கமிஷனுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் கமிஷன் போன்ற சுதந்திரமான அமைப்பின் கருத்துக்கள், முடிவுகளுக்கு, மக்களிடம் நம்பகத்தன்மை உண்டு. அதனால், ஓட்டுப் பதிவுக்கு முன்பே, தேர்தல் அறிக்கைகள் குறித்த முடிவை தெரிவித்து விட்டால், வாக்காளர்கள் முடிவெடுக்க வசதியாக இருக்கும். குதிரை வெளியேறிய பின், லாயத்தை பூட்டுவதால் என்ன பயன்?வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)