கரூரை கலகலப்பாக்கும் செந்தில் பாலாஜி 'பேனர்'

கடந்த ஆண்டு ஜூன் 14ல் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில், அவரது பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்று வந்தது. அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, அரசு நிகழ்ச்சிகளில் செந்தில் பாலாஜி பெயர், புகைப்படம் இடம் பெறுவதில்லை.
இந்நிலையில், வரும் 16, 17ல், கரூர் வெண்ணெய்மலையில் தனியார் அமைப்பு சார்பில் கால்பந்து போட்டி நடக்கிறது. முதல் பரிசு, 40,000 ரூபாய் என்றும், வழங்குபவர் கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி என்றும், 'பிளக்ஸ் பேனர்'கள் கரூர் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் எம்.எல்.ஏ., பதவியில் தொடர்கிறார். அவர் சார்பாக கட்சியினர் கரூரில் பல நலத்திட்ட உதவிகளை, அவரது பெயரில் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கால்பந்து போட்டிக்கும், அவர் சார்பில் பரிசு வழங்குகின்றனர். அதற்காக வைத்த பேனர்களை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன' என்றார்.
வாசகர் கருத்து