இப்போதும் செந்தில் பாலாஜி தான் பார்க்கிறார்: கே.என்.நேரு ஓப்பன் டாக்
"தேர்தலில் மோடியை தோற்கடிக்க முடியாது என்றார்கள். அவர் 400 இடங்களுக்கும் மேல் அவர் வெற்றி பெறுவார் என்றார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது" என, அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
பெரம்பலூரில் தி.மு.க., வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
திருச்சி தொகுதி தி.மு.க.,வுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் நினைப்பது நடந்திருக்கும். கடைசி நேரத்தில் மாறிவிட்டது. இல்லாவிட்டால் நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எல்லாருடனும் இருந்து அவர்களை முன்னேற்றி இருக்க வேண்டும் என நினைப்போம்.
மிகப் பெரிய சமூகமாக (முத்தரையர்) நீங்கள் இருக்கிறீர்கள். நாங்களும் உங்களை ஒட்டித் தான் இருப்போம். வாய்ப்பு கிடைக்கும் போது மிகப்பெரிய அளவுக்கு இந்த சமூகம் வரும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
இது மிக முக்கியமான தேர்தல். அமைச்சர் (?) செந்தில் பாலாஜி இல்லாததால் அந்த வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் அவர் தான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
திருச்சியில் 9 தொகுதிகள் இருக்கின்றன. அங்கு 3000 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி திட்டங்களை முதல்வர் கொடுத்திருக்கிறார். கரூருக்கு என்ன கேட்டாலும் அதை செய்து தரும் முதல்வர் இருக்கிறார்.
காவிரியில் இருந்து முசிறி, மண்ணச்ச நல்லூர், குளித்தலை போன்ற பகுதிகளுக்கு நீரேற்று பாசனத்தைக் கொண்டு நிறைவேற்றும் பணி ஒன்று இருக்கிறது. அதை செய்து தருவோம். மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நாம் நினைக்கும் பணி நடக்கும்.
சமூக நீதிக் கொள்கைக்கு நேர் எதிரானவராக மோடி இருக்கிறார். சமூக நீதியை பா.ஜ., ஏற்காது. தி.மு.க., கொள்கையைப் போலவே மிகச் சிறப்பான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கொடுத்துள்ளது.
தேர்தலில் மோடியை தோற்கடிக்க முடியாது என்றார்கள். அவர் 400 இடங்களுக்கும் மேல் அவர் வெற்றி பெறுவார் என்றார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது.
இந்தமுறை 200க்கும் கீழ் தான் மோடி வெற்றி பெற்றார். 220 இடங்கள் இருந்தாலே ஒருவர் ஆட்சிக்கு வந்துவிட முடியும். அதில் 7ல் ஒரு பங்காக நாம் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து