சரத்குமாரை இழுத்த பா.ஜ., பின்னணியில் பிரபல தொழிலதிபர்
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவதற்கு தயாராகஇருந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விரித்த, 'வலையில்' விழுந்ததால், கடைசி நேரத்தில், பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமானார்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினரின் ஓட்டுகள் புதிய தமிழகம் கட்சிக்கும் கணிசமாக கிடைக்கும்.
பா.ஜ., கூட்டணியில், புதிய தமிழகம் இடம் பெறும் என, எதிர்பார்த்தபட்சத்தில், ஜான்பாண்டியனின் தமிழக முன்னேற்றக்கழகம் இடம் பெற்றது. எனவே, புதிய தமிழகம் கட்சி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறது.
தென் மாவட்டத்தில் திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒட்டு மொத்த நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஓட்டுகளை வளைக்க வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது.
அனுமதிக்கவில்லை
மேலும், நாடார்சமுதாயத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவருக்கு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியும், பிரபல பல் டாக்டர் ஒருவருக்குஎம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியும் வழங்க தி.மு.க., அரசுவிரும்பியது.
ஆனால், நிர்வாக ரீதியாக, அவர்களுக்கு பதவி வழங்க முடியாத காரணத்தால் கவர்னர் வாயிலாக பதவி நியமனத்திற்கு மத்திய அரசு தரப்பில் அனுமதிக்கவில்லை.
இதனால், பா.ஜ., மீது நாடார் சமுதாய மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. எனவே, ஹிந்து நாடார் சமுதாயத்தினரை சமாதானப்படுத்தும் வகையில், சமத்துவ மக்கள் கட்சியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி தென்மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த தொழிலதிபரும், நடிகர் சரத்குமாரை தொடர்பு கொண்டு, அ.தி.மு.க., பக்கம் செல்லவிடாமல் தடுத்துஉள்ளார். மேலும் சரத்குமாரை பா.ஜ., பக்கம் வரவழைக்கும் வகையில் சுமுகமாக பேச்சு நடத்தி முடித்தார். இதையடுத்து, சரத்குமார், துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இணைந்து செயல்பட...
சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பா.ஜ., தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த்மேனன், பிப்., 28ம்தேதி கூட்டணி தொடர்பாக, முதல் கட்ட பேச்சு நடத்தினார். அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால், நேற்று மத்திய அமைச்சர் முருகன், தேசிய செயலர் ஹெச். ராஜா, அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினர். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சு சுமுகமாக நடந்தேறியது.
கூட்டணி தொடர்பான முடிவு எடுக்க, ஏற்கனவே கட்சியினர் எனக்கு அதிகாரம் அளித்து விட்டனர். மூன்றாவது முறையாக, பிரதமர் பதவிக்கு மோடியை தேர்ந்தெடுக்க, பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து