'மாஜி'க்கு வாய்ப்பூட்டு போட்ட அ.தி.மு.க., : தொடரும் சர்ச்சை பேச்சுகள்
அ.தி.மு.க., பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், சமீபத்தில் மேடையில் பேசியபோது, 'முதல்வர் கருணாநிதியை எச்சரிக்கிறேன்' என்று மாற்றிப் பேசினார். தொடர்ச்சியாக அவர் அப்படி பேசி வருவது அக்கட்சி தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2017-ல் துணை முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார். அது குறித்துபேசிய சீனிவாசன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாகவும், மற்றொரு முறை பிரதமர் நரசிம்மராவை சந்தித்ததாகவும் மாற்றிப் பேசி பேசு பொருளானார்.
அதேபோல், ஈஷா யோகா மையம் நிகழ்ச்சியில் பேசியபோது, பாடகி சுதா ரகுநாதனை, பரதநாட்டிய கலைஞர் என்று கூறினார். 2019-ல் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நிகழ்ச்சியில், 'மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் அறிவித்திருக்கிறார். இது அருமையான பட்ஜெட்' எனச் சொல்லி ஷாக் கொடுத்தார். அதுமட்டுமின்றி சமீபத்தில் மேடையில் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று அதிர்ச்சியளித்து பின்னர் மாற்றிக் கூறினார். இப்படி ஒவ்வொரு முறை மேடையேறும்போதும் பெயரை மாற்றியோ, சம்பவங்களை மாற்றிப் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியில் நடந்தது. இதில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என சொல்வதற்கு பதில் 'மதுவிலக்கை ரத்து செய்வோம்' என பேசினார்.
'பஞ்சு மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன கலவையை சாப்பிட்டால் புற்றுநோய் வரும், தடை விதித்த அரசின் செயல் பாராட்டுக்குரிய விஷயமாகும்' என்று கூற நினைத்து, 'பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் குஷ்டம் வரும்' என உளறினார். பின்னர் அருகில் இருந்தோர் சுட்டிக் காட்ட, சுதாரித்த சீனிவாசன் 'கேன்சர் வரும்' என்று திருத்தினார்.
மேலும் 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். இல்லை என்றால், வருகின்ற லோக்சபா, சட்டசபைத் தேர்தலில் அவர்களது சக்தி என்னவென்று பார்த்துக் கொள்ளுங்கள். ஆகவே, முதல்வர் கருணாநிதியை எச்சரிக்கிறேன்' என்று பேச, கட்சித் தலைமை கடும் நெருக்கடியில் உள்ளது.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் பல்வேறு அணிகளின் செயலர்கள் பேசினர். ஆனால், முன்னிலை வகித்த முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. பாஸ்கரன் எப்போது மேடையில் பேசினாலும் கிராமத்து பாணியில் பேசி நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதோடு சர்ச்சையிலும் சிக்க கூடியவர். கடந்த ஆண்டு தி.மு.க., அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஜாதி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். கடந்த மாதம் தி.மு.க., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை கலெக்டரை பற்றி பேசி சர்ச்சைக்கு உள்ளானார். அதனால் எச்சரிக்கை அடைந்த கட்சி மேலிடம், லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கி ஓட்டுகளை காலி செய்து விடக் கூடாது என்பதற்காக அவரைப் பேச வேண்டாம் எனக் கூறி தடுத்து விட்டதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
வாசகர் கருத்து