தேர்தலில் யாருக்கு 'சீட்' பா.ஜ.,வில் கருத்து கேட்பு
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், 39 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என, தமிழக பா.ஜ., தலைமை நியமித்த பொறுப்பாளர்கள் நேற்று நிர்வாகிகளிடம் கருத்து கேட்டனர்.
தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை, 6ம் தேதி சமர்ப்பிக்குமாறு தமிழக பா.ஜ., தலைமைக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, யார் யாரை வேட்பாளர்களாக அறிவிக்கலாம் என்று, பா.ஜ., சார்பில், 39 தொகுதிகளிலும் மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்களிடம் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்ட தலா இரு பொறுப்பாளர்கள், மாவட்ட பா.ஜ., அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்களில் அந்த கூட்டத்தை நடத்தினர். அதில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் ஒரு படிவம் வழங்கப்பட்டு, தங்கள் தொகுதியில் நிறுத்த விருப்பப்படும் மூன்று வேட்பாளர்களின் பெயர் எழுதி வாங்கப்பட்டது.
அதன்படி, தென் சென்னையில், மத்திய இணை அமைச்சர் முருகன், ஏ.பி.முருகானந்தம்; வடசென்னை தொகுதியில், தமிழக பா.ஜ., துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில செயலர் கராத்தே தியாகராஜன்; மத்திய சென்னையில் மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாநில செயலர் கார்த்தியாயினி என, 39 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் நேற்று கூறியதாவது:
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு நிர்வாகியிடமும், 'உங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவித்தால் வெற்றி வாய்ப்பு உள்ளது' என்று கேட்டு, மூன்று பேரின் பெயர்கள் எழுதி வாங்கப்பட்டன. அவை, அனைத்தும் தொகுக்கப்பட்டு நாளை மாநில குழுவிடம் வழங்கப்படும்.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை, மாநில குழுவினர் நாளை மேலிட தலைவர்களிடம் வழங்குவர். அதன்பின், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினர்.
வாசகர் கருத்து