திருக்கோவிலூர் தொகுதி காலி: தேர்தல் கமிஷனுக்கு கடிதம்
முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தி,மு.க., அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர், பொன்முடி. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கி, உத்தரவு வெளியானது.
அதேநேரம், திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவிக்கவில்லை. இதனைக் கண்டித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை செயலரை சந்தித்து கடிதம் வழங்கினர்.
இதுகுறித்து பேசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், 'பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் நீதிமன்ற ஆவணங்கள் கிடைத்ததும் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பொன்முடி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சட்டசபை செயலரிடம் கடிதம் கொடுத்தபோது, நீதிமன்ற கோப்புகளை பெறுவதற்கான நடவடிக்கைகளில் சட்டசபை செயலகம் ஈடுபட்டுள்ளதாகவும் அவை வந்தவுடன் பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பதாக செயலர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் உரிய முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம்' என்றார்.
இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விளவங்கோடு தொகுதியோடு திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாசகர் கருத்து