இந்தியா சுதந்திரம் அடைந்த பின், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில், 1952 ஜனவரியில், முதலாவது பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது, தமிழகம் ஒருங்கிணைந்த, மதராஸ் மாகாணமாக இருந்தது. மாநில சட்டசபையில், 375 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.
ஒருங்கிணைந்த மதராஸ் மாநிலத்தின், தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளை, தனி ஆந்திர மாநிலமாகவும், கன்னடம் பேசப்பட்ட பகுதிகளை, அன்றைய மைசூர் மாநிலத்துடன் இணைத்தும், 1953 அக்., 1ல் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, மதராஸ் மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை, 231 ஆக குறைந்தது. அடுத்து, 1956ல், மாநிலங்கள் சீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. மலபார் மாவட்டங்களை சேர்ந்த தொகுதிகள், கேரளாவுடன் இணைக்கப்பட்டன. கேரள மாநிலத்தில் இருந்த, தமிழ் பேசும் பகுதிகளான, தற்போதைய கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை தாலுகாவும், மதராஸ் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.
அடுத்து, 1956ல் நடந்த தேர்தலில், மதராஸ் மாநிலத்தில், 34 லோக்சபா தொகுதிகள், 167 சட்டசபை தொகுதிகள் இருந்தன. இதில், 38 இரு உறுப்பினர் தொகுதிகளாக இருந்தன. அதன்பின், 1961ல், லோக்சபா தொகுதிகள், 34 ஆக இருந்தது. சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை, 206 ஆக உயர்ந்தது.அடுத்து, 1964ல் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. அப்போது, லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை, 39 ஆகவும், சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை, 234 ஆகவும் உயர்த்தப்பட்டது. 1969 ஜன., 14ம் தேதி, மதராஸ் மாநிலம், தமிழ்நாடு மாநிலமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த, 2000ம் ஆண்டில், தொகுதிகளை மறுவரையறை செய்ய, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 2008ல் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. எனினும், எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னை மாகாணம் என இருந்தபோது, 1952ம் ஆண்டு ஜனவரி, 2ல் துவங்கி, 25ம் தேதி வரை, மொத்தம் ஒன்பது கட்டமாக, சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. 1957ல், மார்ச், 1, 4, 6, 8, 11 என, ஐந்து கட்ட தேர்தல் நடந்தது.
கடந்த, 1962 சட்டசபை பொதுத் தேர்தல், பிப்., 17, 19, 21, 24 என, நான்கு கட்டமாக நடந்தது. 1967 சட்டசபை பொதுத் தேர்தல், பிப்., 5, 18, 21 என, மூன்று கட்டமாக நடத்தப்பட்டது. பின், 1971ம் ஆண்டு சட்டசபை தேர்தல், மார்ச், 1, 4, 7 என, மூன்று கட்டமாக நடந்தது. 1977ம் ஆண்டு தேர்தல், ஜூன், 12, 14 என, இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. 1980ம் ஆண்டு தேர்தல், மே, 28, 31 என, இரண்டு கட்டமாக நடந்தது.
அடுத்து, 1985 டிச., 24; 1989 ஜன., 21; 1991 ஜூன், 15 என, ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மீண்டும், 1996ல், ஏப்., 22, மே, 2 என, இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின், 2001 மே, 10; 2006 மே, 8; 2011 ஏப்., 13; 2016 மே, 16 என, ஒரே கட்டமாக தேர்தல் தொடர்கிறது. இந்த ஆண்டும் ஏப்., 6ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வாசகர் கருத்து