Advertisement

"மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டேன்" - பா.ஜ.,வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ,. விஜயதரணி

காங்கிரசில் இருந்து விலகி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்திருக்கிறார், விளவங்கோடு எம்.எல்.ஏ,. விஜயதரணி. 'பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி, பா.ஜ.,' என பேட்டி அளித்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றவர், விஜயதரணி. அக்கட்சியின் சட்டமன்ற கொறடாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ஙகாங்கிரசில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லைங எனக் கூறி கடந்த சில நாள்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார்.

அவர், பா.ஜ.,வில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'வழக்கு ஒன்றுக்காக உச்ச நீதிமன்றம் வந்திருக்கிறேன்' என்றவர், பா.ஜ,.வில் சேரப் போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றார்.

அவர் வகித்து வந்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பு, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.,வுக்கு வழங்கப்பட்டது. இது விஜயதரணியை மேலும் கோபப்படுத்தியுள்ளது. 'எல்லா பொறுப்பையும் அவர்களே எடுத்துக் கொள்வார்கள் என்றால், இனியும் இந்தக் கட்சியில் ஏன் நீடிக்க வேண்டும்?' என தனது ஆதரவாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது.

அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்திருக்கிறார், விஜயதரணி.

பா.ஜ.,வில் இணைந்தது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, " சிறுவயது முதல் காங்கிரஸ் கட்சியில் ஓர் அங்கமாக இருந்தேன். தற்போது, பா.ஜ.,வில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.,வில் இணைந்துள்ளேன். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சியாக பா.ஜ,. உள்ளது. தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ., சிறப்பாக வளர்ந்து வருகிறது. அதனை மேலும் வலுப்பெற வைப்போம்" என்றார்.

விஜயதரணியின் முடிவை விமர்சித்துள்ள விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர், "காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் விஜயதரணி சேர்ந்தது என்பது புதைகுழியில் விழுந்ததற்கு சமம்" என விமர்சித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்