எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பா? - பதறும் பா.ம.க., எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க., பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து பா.ம.க., அறிவிக்கவில்லை. அ.தி.மு.க,.வுடன் பேசி வருவதாக ஒரு தரப்பும் பா.ஜ.க., தரப்பில் பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளதாக இன்னொரு தரப்பும் கூறி வருகிறது.
இரட்டை இலக்க தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி மற்றும் மத்திய அமைச்சர் பதவி என்ற கோரிக்கையை பா.ஜ.,விடம் பா.ம.க., முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிசாமி வீட்டின் முன்பு பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களின் கார்கள் நின்று கொண்டிருந்தன. இதில், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,வான சிவகுமார், மருத்துவர் ராமதாஸுக்கு மிகவும் நெருக்கமானவராக பார்க்கப்படுகிறார். அந்தவகையில், ராமதாசின் உத்தரவின்பேரில் பழனிசாமியை சந்திக்க இவர்கள் வந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
"பழனிசாமியை சந்தித்தது ஏன்?" என மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவகுமார் கூறுகையில், "எங்கள் தொகுதியில் அங்கன்வாடி மையங்கள் தொடர்பான கோரிக்கை வைப்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்திக்க அவர்கள் இல்லத்திற்குச் சென்றோம். கீதா ஜீவன் வீட்டிற்கு அருகில்தான் பழனிசாமி வீடு இருக்கின்றது என்பது தெரியாது.
அங்கு கார்களை நிறுத்தி விட்டு அமைச்சர் வீட்டிற்குச் சென்றோம். பழனிசாமி வீடு அருகே பா.ம.க., கொடி கட்டப்பட்ட எங்கள் கார்கள் நின்றதால் கூட்டணி பேச்சு என செய்தி பரப்பி விட்டனர். நாங்கள் பழனிசாமியை சந்திக்கவில்லை. அது தவறான செய்தி" என்றார்.
வாசகர் கருத்து