கோவையில் ஏன் தோற்றேன்? - கமல் சொன்ன காரணம்
'என்னை அரசியலில் இருந்து வெளியேற்றுவது கடினம்' என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், "இங்கு முழுநேர அரசியல்வாதி என யாரும் இல்லை. முழுநேர கணவனும் இல்லை; பிள்ளைகளும் இல்லை. முழு நேர தகப்பன்கள் எனவும் யாரும் இல்லை. கோவையில் 90 ஆயிரம் பேர் ஓட்டுப் போடாததால் தான் நான் தோற்றேன்.
இந்தியாவில் முழுநேர குடிமகனாக இல்லாமல் கூட 40 சதவீதம் பேர் ஓட்டுப் போடக் கூட செல்லாமல் இருக்கின்றனர். என்னை அரசியலுக்கு வரவைப்பது கடினம் என்று பேசினார்கள். அதைவிட கடினம், என்னை வெளியேற்றுவது. சோகத்தில் தான் அரசியலுக்கு வந்தேன். கோபத்தில் அல்ல. எனது அரசியல் பயணத்தில் இனி அழுத்தமாக நடைபோடுவோம்.
நீங்கள் பார்க்கும் சக அரசியல்வாதிகள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்ல, வியாபாரிகள். அவர்களைப் பார்த்து ஆசைப்படாதீர்கள். முதலில் தேசம், அடுத்து தமிழகம். பிறகு தான் மொழி" என்றவர்,
விவசாயிகள் பிரச்னை குறித்துப் பேசும்போது, " விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்ததில் பத்து சதவீதம் கூட மத்திய அரசு செய்யவில்லை. எதிரிப் படையை நடத்துவதுபோல விவசாயிகளை மத்திய அரசு நடத்துகிறது. படையெடுத்து வரும் எதிரிகளுக்கு என்ன வரவேற்போ, அதை டெல்லியில் கொடுக்கிறார்கள். விவசாயிகள் போராடுவதைத் தடுக்க ஆணி படுக்கை போட்டிருக்கிறார்கள்.
தமிழகம் கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவை தான் மத்திய அரசு வழங்குகிறது. தேற்கு தேய்ந்தால் பரவாயில்லை என மத்தியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். ஓட்டுக்காக காசு வாங்குவதை நிறுத்தினால் தான் ஏழ்மை ஒழியும்" என்றார்.
வாசகர் கருத்து