Advertisement

நடுநிலை ஓட்டு அண்ணாமலைக்கே!

கோவை லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், ஐந்தில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், ஒன்றில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும் இருக்கின்றனர். கோவை மக்கள் பொதுவாகவே அ.தி.மு.க., ஆட்சியை தான் விரும்புகின்றனர். தி.மு.க., மேல் இங்கு கடும் அதிருப்தி இருக்கிறது.

மின் கட்டண உயர்வு, மகளிர் திட்டங்களில் குறைபாடுகள், போதை பிரச்னை, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என, பொதுவான அதிருப்திகளின் பட்டியல் நீள்கிறது. கோவைக்கு எந்த பெரிய திட்டத்தையும் தி.மு.க., கொண்டு வரவில்லை என்ற எண்ணமும் இருக்கிறது.

அதோடு, குடிநீர் தட்டுப்பாடு, போக்கு வரத்து நெரிசல், கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட மேம்பால பணிகள் முடியாதது, புறவழிச்சாலை திட்ட தாமதம், காரமடை - -கல்லாறு பைபாஸ் சாலை திட்டத்தை கைவிட்டது என்று உள்ளூர் தேவைகளை தி.மு.க., பூர்த்தி செய்யவில்லை என்ற கோபம் இருக்கிறது.

தவிர, சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அறிவித்த 530 வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மற்றும் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள் மேல் ஊழல் வழக்கு தொடுக்கப்படும் என சொல்லி ஏதும் செய்யாதது ஆகிய காரணங்களால், தி.மு.க.,வை மக்கள் நம்ப தயாராக இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சொந்த கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். அதனால், இங்கு தி.மு.க., வெற்றி பெற வாய்ப்பு குறைவு.

நழுவிய வாய்ப்பு



அ.தி.மு.க.,விற்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், பழனிசாமியால் அந்த வாய்ப்பு நழுவப்போகிறது என்றே சொல்ல வேண்டும். எப்படி என்று பார்ப்போம்...

1கோவை லோக்சபா தொகுதியின் ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க., என்ற பெயருக்காக எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்று இருந்தாலும், கோவை தெற்கு தொகுதியில் மட்டும் அது பலிக்கவில்லை. காரணம், வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் கமல்ஹாசனுக்கு இடையே தான் போட்டி இருந்தது. தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

அந்த இடத்தில் கமல் என்ற தனிமனித பிரபலம் தான் முக்கியத்துவம் பெற்றார். கோவை மக்கள் பிரபலமான வேட்பாளர்களை விரும்புகின்றனர். அதற்காக தங்கள் வாடிக்கையான கட்சி தாண்டியும் ஓட்டளிக்கின்றனர்.

அண்ணாமலை பிரபலமானவர். அவருக்கு போட்டியாக அவரை விட பிரபலமானவரை களமிறக்கி இருக்க வேண்டும். அதை விடுத்து, ஜாதி மற்றும் கல்வி அடிப்படையில் சிங்கை ராமச்சந்திரனை களமிறக்கி உள்ளார் பழனிசாமி. அப்படி தேர்ந்தெடுக்க இது என்ன வினாடி - வினா போட்டியா?

பிரபலமானவரை பழனிசாமி வேட்பாளர் ஆக்காததற்கு காரணம் தன்னம்பிக்கையின்மை. அப்படி உள்ளவர்களை தனக்கு போட்டியாளர்கள் என்று நினைக்கிறார்.

2 இன்னும் பா.ஜ.,வை எதிர்க்க தயங்குகிறார் என்பது தான் மக்கள் மனதில் இருக்கிறது.

'பா.ஜ.,வை எதிர்க்க நான் என்ன தடியை எடுத்துக்கொண்டா போக முடியும்?' என்பதும், 'நான் எதிர்க்கட்சியாக இருக்கிறேன்; ஆளுங்கட்சியாக இருந்தால் தான் பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும்' என்பதும், 'கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு பா.ஜ., செயல்திட்டங்களை முழுமையாக ஆதரித்தேன்' என்ற பேச்சுக்கள் எல்லாம், இன்னும் அவர் பா.ஜ.,வை எதிர்க்க மனதளவில் தயாராக இல்லை என்பதையே காட்டுகின்றன.

பா.ஜ.,வுக்கு யார் அடிமை என்று தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இடையே நடக்கிற வார்த்தைப் போர், திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்துகின்றன.

இவற்றையும் விட முக்கியமாக, மக்களிடம் அ.தி.மு.க., பிளவுபட்டுவிட்டது என்ற எண்ணம் இருக்கிறது. 'பழனிசாமியிடம் தான் சின்னம் இருக்கிறது' என்று பேசப்பட்டாலும், அ.தி.மு.க.,வில் பிரிந்துள்ள ஐந்து அணிகளில் பெரிய அணியாகத் தான் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வை பார்க்கின்றனர். அவரை வலிமையான தலைவராக, மொத்த அ.தி.மு.க.,வின் முகமாக பார்க்கவில்லை.

அதற்கு ஏற்ப அவரும், சேவல் சின்னத்தில் செயல்படும் ஜெ., அணி போன்றே கோஷ்டி அரசியலை முன்னெடுக்கிறார். அ.தி.மு.க., சரியான தலைமை இல்லாமல் தத்தளிக்கிறது என்று தான் பொதுமக்கள் பார்க்கின்றனர். குறைந்தபட்சம் கட்சியை வலிமைப்படுத்தி ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

பிளவும் பலமும்



தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இப்படி பலவீனமாக இருப்பது, பா.ஜ.,வுக்கு பலம் சேர்க்கிறது. அதே நேரம், கட்சி சாராதவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஓட்டு 75 சதவீதம் அண்ணாமலைக்கு செல்வதற்கே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தவிர, தி.மு.க.,- - அ.தி.மு.க., அதிருப்தி ஓட்டுகளும் அவருக்கு செல்லும். அதனால், மற்ற இடங்களில் பா.ஜ., வெற்றி பெறாவிட்டாலும் கோவையை கைப்பற்றும் சூழல் உருவாகி உள்ளது.

அண்ணாமலை வெற்றி பெற்றால், பழனிசாமி மற்றும் வேலுமணியின் அரசியல் அஸ்தமனத்திற்கு ஆரம்பமாக இருக்கும். வரும் சட்டசபை தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை முன்னிறுத்தப்படலாம். அப்போது, அ.தி.மு.க., கடும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அண்ணாமலைக்கு மடைமாறுகிற ஓட்டுகள் நடுநிலையாளர்கள் மற்றும் அ.தி.மு.க., - தி.மு.க., அதிருப்தியாளர்கள் தான். இதில், அண்ணாமலையின் பலம் ஏதுமில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் பிரச்னை ஏதும் இல்லை; கட்சிக்குள் தான் பிரச்னை. தி.மு.க.,வில் கட்சிக்குள் ஏதும் பிரச்னை இல்லை; ஆட்சியில் தான் பிரச்னை.

இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. தங்களை சுதாரித்துக் கொள்ளுமா தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும்?

-கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி.,



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்